இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தருதல்

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்கள்

 

பல்வேறு கடமைகளுக்காக பாராளுமன்றத்திற்கு வருகைதருகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பாராளுமன்றத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்குதலுடன் தொடர்புடைய ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் பற்றி விழிப்புணர்வூட்டுதல்

   
1.

அரச உத்தியோகத்தர்கள் வருகின்ற வாகனங்களை பாராளுமன்றத் தொகுதிக்குள் ஓட்டிவருதல்

  1. உத்தியோகபூர்வ அலுவல்களுக்காக பாராளுமன்றத்திற்கு வருகைதருகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பயணிக்கின்ற வாகனங்களை பாதுகாப்பு அவசியப்பாடுகளுக்கு கட்டுப்பட்டதாக, பாராளுமன்ற வளவுக்குள் ஓட்டிவரும் பொருட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  2. அதற்கிணங்க அரச உத்தியோகத்தர்கள் வருகைதருகின்ற வாகனங்களை ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக மாத்திரம் ஓட்டிவர முடியும்.

  3. ஜயந்திபுர பிரதான நுழைவாயிலின் பாதுகாப்புச் சோதனைக் கூறில் அடையாளம்காணப்பட்ட பின்னர் வாகனம் மாத்திரம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். இங்கு வாகனத்தை விட்டு இறங்கவேண்டியது அவசியமற்றது.

  4. ஆயினும், வருகை தருகின்ற வாகனத்தில் எடுத்து வரப்படுகின்ற அனைத்துப் பொருட்களும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படும். எனவே பாராளுமன்றத்தின் கடமைத் தேவைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியமற்ற அல்லது எடுத்துவர பொருத்தமற்ற சாதனங்கள்/உபகரணங்கள்/பண்டங்கள்/பயணப் பைகள் போன்றவற்றை எடுத்துவருவதை இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளல் பாதுகாப்புச் சோதனைக்கு வசதியளிப்பதாக அமையும்.

  5. மேற்படி பாதுகாப்புச் சோதனை நிறைவடைந்த பின்னர் பொலிசு உத்தியோகத்தர்களால் பாராளுமன்ற கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலை நோக்கி வாகனம் ஆற்றுப்படுத்தப்படும்.

  6. பொதுமக்கள் நுழைவாயிலில் வாகனத்தை விட்டிறங்கிய பின்னர்,
    • உத்தியோகத்தரகள் அரச உத்தியோகத்தர்களின் வரவேற்புக் கருமபீடத்திற்கும்,
    • சாரதியொருவருடன் வருகைதந்திருப்பின் வாகனத்தை நிறுத்திவைப்பதற்காக ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்துக்கு அல்லது ஏற்புடைய வாகனத் தரிப்பிடத்துக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

      திரும்பிச் செல்கையில் வாகனத்தை மீள அழைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  7. கடமைகள் முடிவடைந்ததன் பின்னர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து வெளியேறுவதற்கு ஜயந்திபுர பிரதான நுழைவாயிலை அல்லது நுக செவன நுழைவாயிலை அல்லது பின்னியர நுழைவாயிலை உபயோகிக்கலாம்.

  8. எவ்வாறாயினும், எவரேனும் ஓர் அரச உத்தியோகத்தர் தாமே வாகனத்தைச் செலுத்தி வந்தாராயின் வாகனத்தை ஜயந்திபுர வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தியதன் பின்னர் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்துக்கு வரவேண்டும் என்பதுடன், அங்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேவைப்பாடுகளை நிறைவு செய்த பின்னர், பாராளுமன்ற வளவுக்குள் பிரவேசிப்பதற்காக குறுகிய தூர பாராளுமன்ற பஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.
   
2.

தற்காலிக நிற அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை பாராளுமன்றக் கட்டிடத்துக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

  1. அரச உத்தியோகத்தர்களின் வரவேற்பு கருமபீடத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள வரவேற்பு உத்தியோகத்தரிடம் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, தனது தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டை அல்லது தனது நிறுவனப் பிரதானியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அடையாள அட்டையை சமர்ப்பித்தலும் படைக்கலச் சேவிதரினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரமொன்றிருப்பின் அதை சமர்ப்பித்தலும் அவசியமானதாகும்.

  2. அதன் பின்னர், உரிய தகவல்கள் பதியப்படுவதுடன் அடையாள ஆவணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர், உரிய இடம் வரை செல்லுபடியான தற்காலிக நிற அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதுடன், வெளியேறும்போது அதனைத் திருப்பி ஒப்படைத்துவிட்டு அடையாள ஆவணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

  3. பாராளுமன்றக் கட்டடத்திற்குள் பிரவேசிக்கையில் அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதோடு அவர்கள் எடுத்து வரும் ஆவணங்களும் பயணப்பொதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றக் கட்டடத்திற்குள் பிரவேசிக்கின்ற அனைவரும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், இதற்கு அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

  4. பாராளுமன்ற வளவுக்குள் தங்கியிருக்கும் காலகட்டத்தினுள், பாராளுமன்றத்தினுள் நடைமுறைப்படுத்தப்டுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கேற்ப செயற்படுவது அவசியம் என்பதால் பாராளுமன்ற பணியாட்டொகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், பாராளுமன்ற பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது கடமையை நிறைவேற்ற ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்து அரசாங்க உத்தியோத்தர்களிடமும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
   
3.

கையடக்கத் தொலைபேசி / மடிக் கனணி/ டெப்லற் / ஐபேட் மற்றும் வேறு இலத்தரனியல் கருவிகளைபாராளுமன்ற கட்டடத்தினுள் எடுத்து வர அனுமதி வழங்குதல்

  1. அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்தினுள் கையடக்கத் தெலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கபடமாட்டாது. ஆதலால், அக்கூடத்திற்கு செல்கின்ற உத்தியோகத்தர்கள் தமது கையடக்கத் தெலைபேசிகளை அரசாங்க உத்தியோகத்தர் வரவேற்பு கருமபீடத்திற்கு அருகாமையில் கடமையாற்றுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துச் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  2. அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்திற்குள் பிரவேசிப்பதை தவிர வேறு எதேனும் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குழு அறைகளுக்கு வருகைதரும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, தேவைப்படுவதாயின் மாத்திரம் தனது கையடக்கத் தொலைபேசியை பாராளுமன்ற கட்டடத்தினுள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கலாம் என்பதோடு,அதற்காக உரிய முறையில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரங்களை படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பித்தல் அவசியமாகும்.

  3. தேவைக்கேற்றவாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில் நடப்பு ஆண்டின் இறுதிவரையிலான காலப்பகுதிக்கு இந்த அனுமதிப்பத்திரத்தை விநியோகித்தல் பற்றி பரிசீலிக்கப்படுவதுடன் பாராளுமன்றத்திற்கு வருகைதரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனுமதிப்பத்திரத்தை எடுத்துவருவதற்கு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதின் ஊடாக அநாவசியமான தாமதங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

  4. பாதுகாப்பு தேவைகளுக்கு இசைந்தொழுகும் வகையில் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம், மடிக்கனணி/டெப்லற்/ஐபேட் போன்றவற்றை அரச உத்தியோகத்தர்களுக்கான கூட்டங்களுக்கு எடுத்துவருவதற்கு அனுமதி வழங்க இயலுமென்பதுடன் அவ்விடயத்தில் ஏற்புடைய விண்ணப்படிவத்தை உரியவாறு பூர்த்திசெய்து சமர்ப்பித்தல் வேண்டும்.

  5. கடமைத் தேவையினை கருதி மடிக்கனணி/டெப்லெற்/ஐபேட் போன்றவற்றை அல்லது வேறு ஏதேனும் இலத்திரனியல் உபகரணத்தை பாராளுமன்ற குழுக்களுக்கு அல்லது வேறு குழுக்களுக்கு அல்லது கூட்டங்களுக்கு எடுத்து வருதல் தேவையாயின் அதற்கு அனுமதி வழங்க இயலுமென்பதுடன் அதற்காக உரிய விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

  6. மேற்படி அனுமதி கோரல்களுக்கான சம்பந்தப்பட்ட அனுமதிகள் படைக்கலச் சேவிதர்/பிரதி படைக்கலச் சேவிதர்/உதவி படைக்கல சேவிதர் ஆகியோரினால் மாத்திரமே வழங்கப்படும்.
   
4.

அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு தேவைகளுக்காக பாராளுமன்றத்திற்கு வருகைதருதல் அல்லது அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல் அல்லது அது சம்பந்தமாக தகவல்களடங்கிய ஆவணங்களை அனுப்புதல்

  1. அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் சம்பந்தமாகவோ அல்லது பாராளுமன்றத்திற்கு வருகை தரும் உத்தியோத்தர்கள் சம்பந்தமாகவோ தகவல்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் போது 2777473 அல்லது 2777322 அல்லது 2777323 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதின் மூலமாக துரித கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றதென அன்புடன் அறியத்தருகின்றேன்.

  2. எவ்வாறாயினும், பாராளுமன்ற குழுக்கள் அல்லது வேறு குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக அல்லது வருகை தரும் உத்தியோகத்தர்கள் பற்றிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குழுவின் செயலாளரின்/சம்பந்தப்பட்ட குழுவிற்கான பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் (நிருவாகம்) விதப்புரையுடன் இத்தகவல்கள் அடங்கிய ஆவணங்களை படைக்கலச் சேவிதருக்கு சமர்ப்பித்தல் மிகவும் பொருத்தமானதும் அத்தியாவசியமானதுமான விடயமாகும். எனவே, குறித்த தகவல் பதிவேடுகளை குறிப்பிட்ட உத்தியோகத்தர்களின் ஊடாக படைக்கலச் சேவிதருக்குக் கிடைக்கச் செய்வது மிகவும் பொருத்தமாகும்.

  3. சில அமைச்சுக்கள் / நிறுவனங்கள் மூலம் பாராளுமன்றத்திற்கு வருகை தருகின்ற உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களை அல்லது அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் பற்றிய கோரிக்கைகளை அனுப்பும்போது,
    • படைக்கலச் சேவிதர் அல்லது சம்பந்தப்பட்ட குழுவின் செயலாளர் அல்லது குழு அலுவலகம் என்பவற்றுக்கு குறிப்பிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தல்,
    • ஒரே ஆவணத்தின் பல பிரதிகளை அல்லது பல ஆவணங்களை இடைக்கிடை அனுப்பி வைத்தல்,
    • சம்பந்தப்பட்ட கூட்டம் அல்லது கலந்துரையாடல் ஆரம்பமாவதற்கு மிகவும் அண்மித்த நேரத்தில் குறித்த ஆவணங்களை அனுப்பி வைத்தல்,
    • தகவல்கள் திருத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படாமல் திருத்தப்பட்ட ஆவணங்களை இடைக்கிடை அனுப்பி வைத்தல்,
    • பெயர், பதவி, தேசிய அடையாள அட்டை இலக்கம், வருகை தரும் வாகன இலக்கம் மற்றும் இதர அத்தியாவசிய தகவல்கள் முழுமைபெறாத ஆவணங்களை அனுப்பி வைத்தல்,

      போன்ற விடயங்களின் காரணமாக பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அப்பால் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களை அனுப்புவதற்காக ஆவணங்களைப் பரிசோதனை செய்கின்றபோது வருகைதருகின்ற உத்தியோகத்தர்களும், பாராளுமன்றத்தின் பதவியணியினரும், பொலீஸ் உத்தியோகத்தர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாதல் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே,

    • மேற்குறிபிடப்பட்டுள்ள தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட குழுவின் பணியகத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கும்,
    • அனுப்பப்பட்டுள்ள பெயர் இடாப்புக்களை திருத்த வேண்டியேற்படுகின்ற சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்ட ஆவணமென்பதை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் முகப்புக் கடிதத்துடன் கூடிய ஆவணமொன்றை அல்லது இயலுமான சகல சந்தரப்பங்களிலும், திருத்தப்பட்டுள்ளமைக்கான குறிப்புகளுடன் திருத்தப்பட்ட மூலப் பிரதியையே அனுப்பி வைப்பதற்கும்,
    • ஒரே ஆவணத்தின் பல பிரதிகளை அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், அனுப்பி வைக்கப்பட்ட ஆவணம் உரியவாறு கிடைத்துள்ளதா என்பதை மேற்குறிப்பிடப்பட்ட தொகைநகல் இலக்கங்கள் மூலம் அல்லது தொலைபேசி இலக்கம் 2777100 மூலம் (உள்ளக நீடிப்பு 5422, 5334 மற்றும் 5302) தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறும்,
    • தகவல் அடங்கிய ஆவணங்களை அனுப்பும்போது குறிப்பிட்ட சகல தகவல்களையும் உள்ளடக்கியதாக, குறைந்த பட்சம் ஒரு கடமை தினத்துக்கு முன்னர் அனுப்புவதற்கும்;

    • நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
   
5.

குழுக்கள்/ கலந்துரையாடல்களில் பங்குபற்றும் உத்தியோகத்தர்கள் நேரகாலத்துடன் பாராளுமன்றத்துக்கு வருவதன் அவசியம்.

  1. குழுக்கூட்டங்கள்/ கலந்துரையாடல்கள் ஒரே/ மிக அண்மித்த நேரங்களில் நடைபெறும் சந்தர்ப்பங்கள் பெரிதும் காணப்படுவதனால் அந்த சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களை பாராளுமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அப்பால் அனுப்பிவைப்பதில் தாமதங்கள் ஏற்ப வாய்ப்புக்கள் உள்ளன.

  2. எனவே, ஏதேனும் உத்தியோகபூர்வ கடமைக்காக உங்கள் உத்தியோகத்தர்கள் பாராளுமன்றத்துக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கருகில் உள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்துக்கு வருவதன் மூலம் தேவையற்ற தாமதங்களுக்குள்ளாவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதை தயவுடன் அறியத் தருகின்றேன்.
   
6.

உத்தியோகபூர்வ கடமைகளுக்காக பாராளுமன்றத்துக்கு அடிக்கடி வரும் அரச உத்தியோகத்தர்களின் வசதி கருதி வருடாந்த/ நாளாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.

  1. அமைச்சு செயலாளர்களுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
    பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் தினத்தில் அரச உத்தியோகத்தர்களின் கூடங்களுக்கு பிரவேசித்தல்/ பாராளுமன்றக் குழுக்கள் அல்லது பாராளுமன்றத்தின் வேறு குழுக்களில் கலந்துகொள்வதற்காக அல்லது வேறு வகையிலான கடமைகளுக்காக பாராளுமன்றத்துக்கு வருகை தரும் அரச உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்கென அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வருடாந்த அனுமதிப் பத்திரங்கள் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

    • அமைச்சுச் செயலாளரின் வாகனத்திற்கு– 01 அனுமதிப்பத்திரம்
    • அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்திற்கான– 03 அனுமதிப்பத்திரங்கள்
    • அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான– 02 அனுமதிப்பத்திரங்கள்
    • உணவகத்துக்கான– 01 அனுமதிப்பத்திரம்

      மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கென சம்பந்தப்பட்ட அமைச்சுச் செயலாளரின் ஒப்பத்துடனான விண்ணப்பம் ஒன்றை படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

  2. அமைச்சரவை அந்தஸ்துள்ள கெளரவ அமைச்சர்களின் தனிப்பட்டபணியாட்டொகுதியில் அடங்கும் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த அனுமதிப் பத்திரங்களை வழங்கல்
    மேற்படி பந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக பாராளுமன்றக் கட்டடத்தில் உத்தியோகபூர்வ அறை ஒன்றுக்கு உரித்துடைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாட்டொகுதிக்கும் கீழ் காட்டப்பட்டுள்ளவாறு வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். நடப்பு ஆண்டில் உரிய உத்தியோகத்தர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

    • அந்தரங்கச் செயலாளருக்கான– 01 அனுமதிப்பத்திரம்
    • இணைப்புச் செயலாளருக்கான (பாராளுமன்ற அலுவல்கள்) – 01 அனுமதிப்பத்திரம்
    • இணைப்புச் செயலாளருக்கான (ஊடகம்) – 01 அனுமதிப்பத்திரம்

      மேற்படி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கென சம்பந்தப்பட்ட அமைச்சரின் அல்லது அமைச்சுச் செயலாளரின் ஒப்பத்துடனான விண்ணப்பம் ஒன்றை படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

  3. நாளாந்த பிரவேச அனுமதிப் பத்திரங்களை வழங்கல்
    • மேற்குறிப்பிட்ட பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பிரவேச அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக,

      • அரச உத்தியோகத்தர் கூடத்துக்கு,
      • கடமை நிமித்தம் பாராளுமன்ற கலரிக்கு அல்லது அமைச்சரொருவரின் அறைக்கு அல்லது பிறிதொரு இடத்துக்கு அல்லது
      • பாராளுமன்ற குழுக் கூட்டங்கள்/ வேறு குழுக் கூட்டங்கள்/ வேறு கடமைகளுக்கு

      • கலந்துகொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்துக்கு வருகைதரும் அரச உத்தியோகத்தர்களுக்கு பிரவேசத்திற்கான அனுமதியை வழங்குவதற்கு, ஏற்புடைய அமைச்சுச் செயலாளரின் சிபார்சுக்குட்பட்டு, படைக்கலச்சேவிதருக்கு கடிதமொன்றை சமர்ப்பிப்பதன் மூலம் உரிய தினத்துக்கு செல்லுப்படியாகும் நாளாந்த பிரவேச அனுமதியை படைக்கலச் சேவிதரிடமிருந்து பெற முடியும்.


    • மேற்குறிப்பிட்ட பிரவேச அனுமதி தொடர்பான தகவல்கள் மற்றும் அதற்கேற்புடைய மேலதிக ஆலோசனைகளை

      • பாராளுமன்ற பொலிசுக்கும்
      • ஏற்புடைய வரவேற்பு கருமப்பீடங்கள் மற்றும்
      • ஏற்புடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கருமப்பீடங்களுக்கும்
      வழங்குவதற்கு படைக்கலச்சேவிதர்/பிரதிப்படைக்கலச்சேவிதர் /உதவிப் படைக்கலச்சேவிதர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
   
7.

அரச உத்தியோகத்தர்களின் கூடத்தை அல்லது கடமை நிமித்தம் பொதுசன பார்வையாளர் கூடத்தை பயன்படுத்தல்

  1. அரச உத்தியோகத்தர்களின் கூடத்துக்கு ஏற்புடைய தற்காலிக நிற அனுமதிப் பத்திரமானது, படைக்கலச்சேவிதரினால் ஏற்புடைய நாட்களுக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகத்தர் கூடத்திற்கான அனுமதிப் பத்திரத்தை கொண்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் அரச உத்தியோகத்தர் வரவேற்புக் கருமபீடத்தில் வழங்கப்படும். மேலும் விஷேட தேவையொன்றுக்கமைய கடமை நிமித்தம் பொதுசன பார்வையாளர் கூடத்துக்கு செல்லும் பொருட்டு அனுமதிப் பத்திரம் வழங்கும் செயற்பாடும் மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளுக்கமையவே மேற்கொள்ளப்படும்.

  2. கடமையின் நிமித்தம் அரச உத்தியோகத்தர்களின் கூடம் அல்லது பொதுசன பார்வையாளர் கூடத்துக்கு செல்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறிப்பிட்ட அமைச்சின் செயலாளர் அல்லது மேலதிக செயலாளரினால் மாத்திரம் படைக்கலச் சேவிதருக்கு முன்வைக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய கோரிக்கைகளை ஏனைய அலுவலகங்களுக்கு ஆற்றுப்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கோரப்படுகின்றது. ஏதேனும் விசேட சந்தர்ப்பங்களில், எவரேனும் உத்தியோகத்தர் அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்துக்கு அழைக்கப்படுமிடத்து, சந்தர்ப்பத்தைப் பொருத்து இது தொடர்பிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

  3. எவ்வாறாயினும், அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடம் அல்லது கடமையின் நிமித்தம் பொதுசன பார்வையாளர் கூடத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும் அச்சிடப்பட்ட நாளாந்த அனுமதிப் பத்திரங்களை முன்கூட்டியதாக படைக்கலச் சேவிதர் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை குறிப்பிட்ட அமைச்சு மேற்கொள்ளுதல் வேண்டும். முக்கியமாக, வரவு - செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றது.

  4. அரசாங்க உத்தியோகத்தர் கூடத்தில் உள்ள ஆசனங்களின் குறைந்த எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதனால், கடமையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்யப்பட்ட பட்டியலொன்றின் மூலம் குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தல் வேண்டும்.

  5. அரசாங்க உத்தியோகத்தர் கூடத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்கள், உரிய உடைகளை அணிந்து வருதலும் அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் உரிய ஒழுங்குவிதிகளை பின்பற்றுவதும் கட்டாயமானதாகும். இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன், குறிப்பிட்ட விடயங்கள் அரசாங்க உத்தியோகத்தர்களின் கூடத்துக்கு வருகை தருவதற்காக வழங்கப்படும் நாளாந்த அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்படுவதுடன், கூடத்தினுள் அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  6. அரசாங்க உத்தியோகத்தர்களின் வசதிக்காக கூடத்தினுள் தொலைநகல் வசதிகளும், அக்கூடத்துக்கு வெளியே சந்திப்புக் கூடங்களில் தொலைபேசி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சந்திப்புக் கூடங்களில் காத்திருக்கையில் கௌரவ உறுப்பினர்களது வருகைக்கு தடை ஏற்படாத வகையில் நடந்து கொள்வது கட்டாயமானதாகும் என்பதுடன், சபைக்கு இருபக்கமாகவும் அமைந்துள்ள சந்திப்புக் கூடங்கள் கௌரவ அமைச்சர்களுக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளமையால், இந்த சந்திப்புக் கூடங்களுக்குள் நுழைவதிலிருந்து முற்றாக விலகி இருத்தல் கட்டாயமானதாகும்.
   
8.

அமைச்சு உத்தியோகத்தர்கள் அமைச்சர் அறைகளை உபயோகித்தல்

  1. ஏற்புடைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள கௌரவ அமைச்சருக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் அறையொன்று கிடைத்திருப்பின், பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறுகின்ற அல்லது நடைபெறாத தினங்களில் அலுவலக நேரத்தில், ஏற்புடைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் கடமை நிமித்தமாக அவரது விதப்புரைக்கு ஏற்ப உரிய அனுமதியை பெற வேண்டிய தேவைக்கு அமைவாக, அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்லது ஏற்புடைய அமைச்சரின் பிரத்தியேக பணியாட்டொகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஏற்புடைய அமைச்சர் அறைக்கு ஆற்றுப்படுத்தப்படுவார்கள்.

  2. ஏற்புடைய அமைச்சர் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லையெனில், பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத தினங்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்லது அமைச்சரின் பிரத்தியேக பணியாட்டொகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் எவருக்கும் அமைச்சரின் அறை திறந்து கொடுக்கப்படமாட்டாது.
   
9.

அமைச்சுகளுக்குரிய அல்லது அமைச்சினால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற ஊடக குழுக்கள்

  1. கௌரவ அமைச்சர்களின் தேவைக்கேற்ப தமது அமைச்சிற்குரிய அல்லது அமைச்சினால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற ஊடக குழுக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது இதற்குரிய விண்ணப்பப் படிவத்தை அமைச்சின் ஊடாக படைகளச் சேவிதருக்கு அனுப்புதல் வேண்டும். வருகை தருபவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், கொண்டு வரப்படும் ஊடக உபகரணங்கள்/கருவிகள் ஆகிய தகவல்களையும், இவர்கள் வரும் வாகனத்தின் இலக்கம், கௌரவ அமைச்சரினால் ஊடக சந்திப்பு நடத்தப்படும் இடம் ஆகிய தகவல்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

  2. குறித்த ஊடக குழுக்களில் அடங்கும் ஆட்கள், அவர்கள் வருகைதரும் வாகனங்கள், கொண்டுவரும் உபகரணங்கள் போன்றவை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுமென்பதால் குறித்த நேரத்திற்கு ஆகக்குறைந்தது 45 நிமிடங்களுக்கு முன்பாக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதன் மூலம் அநாவசியமான அசௌகரியங்களை தவிர்க்க முடியும்.

  3. மேற்படி உபகரணங்களை எடுத்துக் கொண்டு, உரிய பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்பட்டவாறு, பணியாட்டொகுதியினரின் நுழைவாயில் ஊடாக மாத்திரம் பாராளுமன்ற கட்டிடத்தினுள் பிரவேசித்தல் வேண்டும் என்பதுடன், படைக்கலச் சேவிதர் அங்கீகாரம் வழங்கியுள்ள இடங்களுக்கு மாத்திரமே பிரவேசித்தல் வேண்டும். வேறு இடங்களுக்குப் பிரவேசிப்பதிலிருந்து மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாத இடங்களில் ஊடக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து முற்றாகத் தவிர்ந்திருத்தல் வேண்டும். மேலும், விசேட அங்கீகாரம் பெற்றுக் கொண்ட இடங்களில் அன்றி பாராளுமன்ற பார்வையாளர் கூடத்தினுள் ஊடக உபகரணங்களை கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
   
10.

குழு அறைகளை ஒதுக்கிக் கொள்ளல்

  1. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு மற்றும் உரிய ஏனைய முன்னுரிமைகளுக்கும், குழு அறையை ஒதுக்கிக் கொடுக்கும் இயலுமைக்கும் உட்பட்டவாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள கெளரவ அமைச்சர் ஒருவருக்கு குழு அறையொன்றை ஒதுக்கிக் கொள்ளும் இயலுமை உள்ளது.

  2. கெளரவ அமைச்சரின் கையொப்பத்துடன் அல்லது அவரின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் செயலாளர் அல்லது மேலதிக செயலாளரின் கையொப்பத்துடன் படைக்கலச் சேவிதரிடம் சமர்ப்பிக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு மாத்திரம் மேற்படி ஏற்பாடுகளுக்கு உட்பட்டு குழு அறைகளை ஒதுக்கிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2023-09-22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom