இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தருதல்

பாராளுமன்றத்தை பார்வையிட வருபவர்களுக்கான அறிவுறுத்தல்கள்

   
1. படைக்கலச் சேவிதரால் வழங்கப்பட்டதும் வருகை தருகின்ற தினத்தில் செல்லுபடியாகின்றதுமான பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரம் பார்வையாளர் கூடத்துக்கு பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்படும். எனவே, தங்களுக்கு படைக்சலச் சேவிதரால் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக விநியோகிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தைத் தவறாமல் எடுத்துவர வேண்டுமென்பதோடு அதனை பாராளுமன்றக் கட்டடத்தை விட்டு நீங்கிச் செல்லும்வரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும்.
   
2.

பாராளுமன்றத்தை பார்வையிட எதிர்பார்க்கும் விருந்தினர்கள் அதற்கான அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு பின்வரும் வழிகளில் படைக்கலச்சேவிதரிடம் விண்ணப்பிக்கலாம்;

  1. கௌரவ பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஊடாக
  2. பாராளுமன்ற பணியாட்டொகுதியினர் அல்லது ஏனைய/ துணைச் சேவை அலுவகமொன்றைச் சேர்ந்த பணியாட்டொகுதியினர் ஊடாக
  3. பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலான "ஜயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலில்" தாபிக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர கருமபீடத்துக்கு சமுகமளித்து சமர்ப்பிக்கப்படுகின்ற வாய்மூல/ எழுத்துமூல கோரிக்கை ஒன்றின் ஊடாக
  4. This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் ஊடாக
  5. 0112777473 இலக்கத்திற்கு தொலைநகல் அனுப்புவதன் ஊடாக
  6. படைக்கலச் சேவிதர், படைக்கலச் சேவிதர் திணைக்களம், பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற எழுத்து மூலமான கோரிக்கையொன்றின் ஊடாக
  7. பாடசாலை சீருடையுடன் சமுகமளிக்கும் பாடசாலை மாணவர்களுடன் கூடிய குழுக்கள் சார்பில் ஏற்புடைய பாடசாலையின் அதிபரினால் பின்வரும் 03 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுடன், படைக்கலச் சேவிதரிடம் மேற்கொள்ளப்படும் எழுத்துமூலமான கோரிக்கையொன்றின் ஊடாக
   
3.

விண்ணப்பிக்கும் போது, பாராளுமன்றத்தை பார்வையிட எதிர்பார்க்கும் திகதி, நேரம், சமுகமளிக்கும் ஆட்களின் எண்ணிக்கை, விண்ணப்பதாரியின் முகவரி ஆகிய விபரங்களையும், சமுகமளிப்போரின் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகிய விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். தொலைபேசி இலக்கங்கள்/ தொலைநகல் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் வசதிகள் இருப்பின் அம்முகவரி (ஈமெயில்) ஆகிய விபரங்களையும் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் சார்பில் துரிதமாக அனுமதிப்பத்திரங்களை அனுப்புவதற்கு வசதியாக இருக்கும். பாடசாலை மாணவர்களுக்காக விண்ணப்பிக்கையில் ஏற்புடைய தரங்களை குறிப்பிடுதல் வேண்டும்.

   
4. வாரத்தின் சகல கடமை நாட்களிலும் மு.ப.9.00 மணி முதல் பி.ப. 3.30 மணி வரையிலும், பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் பிற்பகல் 3.30 மணியைக் கடந்து பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெறும் வரையிலும் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக அனுமதி வழங்கப்படுகின்றது. வார இறுதி நாட்கள் (சனிக்கிழமை /ஞாயிற்றுக்கிழமை) அல்லது போயா விடுமுறை நாட்கள் அல்லது ஏனைய அரசாங்க விடுமுறை நாட்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது. மேலும் சிறப்பு விருந்தினர்களுக்காக பொது மக்கள் பார்வையாளர் கூடங்கள் மட்டுப்படுத்தப்படும் தினங்களிலும் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், ஒவ்வொரு மாதத்திலும் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்து வரும் வாரத்தில் ஆரம்பித்து, அவ்வாரத்தின் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வௌ்ளிக்கிழமை ஆகிய நாட்கள் என்றவாறு, ஒவ்வொரு மாதத்திலும் முதலாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும். எனினும், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் பிரகாரம், மேற்குறிப்பிட்ட தினங்களில் அமர்வுகளை நடத்தாமல் விடுவதற்கும் அல்லது வேறு தினங்களில் அமர்வுகளை நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது.

பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை முன்னறிவித்தலின்றி இரத்துச் செய்வதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் இயலுமானவரை அது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையிலும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும். எனினும், பாராளுமன்றம் வேறுவிதமாகத் தீர்மானிக்கும்பட்சத்தில் அமர்வு இடம்பெறும் நேரங்கள் அவ்வப்போது மாற்றமடையலாம்.
   
5. பாராளுமன்றத்தில் தற்போது அமுலில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி பார்சல்கள், கைப்பைகள், பிரீப்கேஸ், பயணப்பைகள், புத்தகங்கள், ஆவணங்கள், பேனைகள், பென்சில்கள், மழை அங்கிகள், குடைகள், புகைப்படக் கருவிகள், செல்லிடத்தொலைபேசிகள், மின்னியல் அல்லது இலத்திரனியல் சாதனங்களும் துணைக்கருவிகளும், சிகரெட், புகையிலை, வெற்றிலை, புகைக்குழல், உணவு வகைகள் மற்றும் தொப்பிகள் போன்றவற்றையும் மேலும், மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு மேலதிகமாக கலரிக்குள் எடுத்துச் செல்லக்கூடாதென தீர்மானிக்கப்படக்கூடிய/ கருதப்படக்கூடிய எதையாவது நீங்கள் வைத்திருந்தால் அவற்றையும் கலரிக்குள் எடுத்துச் செல்ல இடமளிக்கப்பட மாட்டாது. எனவே, அத்தகைய பொருட்களை எடுத்து வருவதைத் தவிர்த்துக் கொள்க. அத்தகைய பொருட்களெதுவும் உங்கள் வசமிருப்பின் அவற்றை நீங்கள் வருகை தந்த வாகனத்தில் வைத்துவிட்டு வரவும்.
   
6. முறையான உடைகளை அணிந்து வராதவர்கள் (அதாவது, கட்டைக் காற்சட்டை, கையற்ற ஸ்கினி போன்ற பொருத்தமற்ற ஆடைகள்) பாராளுமன்ற வளவுக்குள்/ கலரிக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பொது மக்கள், கலரிக்கு வருகை தருபவர்கள் முறையாக உடையணிந்து வருகைதர வேண்டும்.
   
7. பாராளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட வருகின்ற பாடசாலை மாணவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றபோது ஐந்தாம் ஆண்டு (05) மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமென்பதோடு, அமர்வுகள் இடம்பெறாத நாட்களில் இந்நிபந்தனை அமுல்படுத்தப்பட மாட்டாது. பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகின்ற காலப்பகுதியில் பாராளுமன்ற கலரிக்கு கைக்குழந்தைகளையும், சிறு குழந்தைகளையும் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதென்பதால் அத்தகைய பிள்ளைகளை கலரிக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய பிள்ளைகளையும், சிறிய பாடசாலைப் பிள்ளைகளையும் கலரியின் முதல் வரிசையில் அமர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
   
8. மேற்படி 2வது பந்தியின் பிரகாரம் பாராளுமன்றத்தை பார்வையிட வருபவர்களின் வாகனங்களை பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் பாராளுமன்ற வளவிற்குள் அனுமதித்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் உங்களின் வாகனத்தை பாராளுமன்ற வளவிற்குள் செலுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. பாராளுமன்றத்தைப் பார்வையிட வருபவர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக பாராளுமன்ற வளவின் முன்புறத்தில் விளையாட்டு மைதானத்துக்கு மறுபுறமுள்ள சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள நிலப்பகுதியில் தாபிக்கப்பட்டுள்ள வாகனத்தரிப்பிடத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளமையால் உங்களின் வாகனத்தை அங்கு நிறுத்தவும்.
   
9. மேற்படி நிலப்பகுதியில் உங்கள் வாகனத்தை நிறுத்திய பின்னர் உங்கள் குழுவினருடன் (பாடசாலைச் சீருடையுடன் வருகை தருகின்ற மாணவர்கள் உள்ளடங்கிய குழுக்கள் தவிர) பிரதான வீதியைக் கடந்து பாராளுமன்றத்தின் பிரதான வாயிலினூடாகப் பிரவேசித்து ஜயந்திபுர பாதுகாப்புச் சோதனைச்சாவடிப் பிரிவிற்குச் செல்லவும்.
   
10. ஜயந்திபுர பாதுகாப்பு சோதனைச்சாவடிப் பிரிவில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் உங்கள் கைவசமுள்ள அனுமதிப் பத்திரத்தைக் காட்டிய பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கூடத்திற்குச் சென்று உங்களை உள்ளடக்கிய குழுவினர் வந்துள்ளமையை அவர்களிடம் அறிவிக்கவும். அவர்களின் பதிவேடுகளில் உங்களை உள்ளடக்கிய குழுவினர் வருகை தந்தமை தொடர்பான குறிப்புக்கள் பதியப்பட்ட பின்னர் ஜயந்திபுர பாதுகாப்புச் சோதனைப் பிரிவுக்கு அருகிலிருந்து பாராளுமன்றக் கட்டிடம் வரை வருவதற்கான பாராளுமன்ற பஸ் வண்டியை பாதுகாப்பு உத்தியோகத்தர் வரவழைத்துத் தருவார். மேற்படி 2(iii) பந்தியின் பிரகாரம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகின்றவர்களுக்கு இப்பிரிவின் மூலம் பாராளுமன்றத் தொகுதியினுள் பிரவேசிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
   
11. பாராளுமன்றத்திற்கு வருகின்றவர்கள் அனைவரும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதற்கிணங்க, ஜயந்திபுர பாதுகாப்பு சோதனைப் பிரிவில் வைத்து உங்களை உள்ளடக்கிய குழுவினர் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் உடற்பரிசோதனைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
   
12. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் உங்களின் வாகனத்தை ஜயந்திபுர சோதனைச்சாவடிப் பிரிவில் அமைந்துள்ள இடம்வரை ஓட்டிவர வாய்ப்பளிக்கப்படுவதுடன், வருகைதந்த குழுவினரை அவ்விடத்தில் இறக்கிவிட்டு வாகனத்தை முன்னர் குறிப்பிட்ட சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் நிறுத்திவைக்க வேண்டும்.
   
13. உடற்பரிசோதனையின் பின்னர் உங்களுக்காக வந்துள்ள பாராளுமன்ற பஸ்வண்டி மூலமாகப் பாராளுமன்றக் கட்டிடத்தின் பொதுமக்கள் நுழைவாயில் வரை பயணஞ் செய்யவும். நடந்து செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்பதோடு வழங்கப்பட்ட பஸ் வண்டியில் மாத்திரம் பயணஞ்செய்ய வேண்டும்.
   
14. பொதுமக்கள் நுழைவாயிலின் அருகில் பஸ் வண்டியில் இருந்து இறங்க வேண்டுமென்பதோடு அவ்விடத்தில் கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களைக் கட்டடத்திற்குள் பிரவேசிப்பதற்கான நுழைவாயிலை நோக்கி ஆற்றுப்படுத்துவார்கள்.
   
15. மேற்குறிப்பிட்ட நுழைவாயில் அருகில் நீங்கள் மீண்டும் உடற்பரிசோதனைக்குட்படுத்தப்படுவதால் ஆண்கள் வலது பக்கத்திலும் பெண்கள் இடது பக்கத்திலுமாக இரண்டு வரிசையாக அணிவகுத்து நிற்பின் பரிசோதிக்கும் பணிகளுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் உங்கள் குழுவின் தலைவர் அவருடைய தேசிய அடையாள அட்டையையும் படைக்கலச் சேவிதரால் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரத்தையும் அவ்விடத்தில் கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
   
16. பொதுமக்கள் நுழைவாயிலினூடாக உங்களுக்குப் பாராளுமன்றக் கட்டடத்திற்குள் பிரவேசிக்க முடியும். அத்துடன் மேற்குப் பக்கத்து ஏறுபாதை ஊடாக பொதுமக்கள் கலரிவரை செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். பாராளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராளுமன்றப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அவ்வழியில் உங்களை அனுப்புவார்கள். அதைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்க. கலரிக்கான நுழைவாயிலுக்குப் பக்கத்தில் மீண்டும் நீங்கள் உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதோடு அதற்கு உங்களது ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.
   
17. ஏறுபாதை ஊடாகச் செல்கின்றபோது குறிப்பாக உங்களுடன் வருகின்ற பாடசாலைப் பிள்ளைகளும் ஏனைய பிள்ளைகளும் அடக்கமாக கவனமாக செல்வதை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
   
18. பொதுமக்கள் கலரியில் இருந்தாலும் கட்டடத்திற்குள் எந்தவொரு இடத்தில் இருந்தாலும் பூரண அமைதியைப் பேண வேண்டும். நிறுவன பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் அமைதியாக இருக்கின்றனரென்பதையும் பண்புடன் நடந்து கொள்கின்றனரென்பதையும் பொதுமக்கள் கலரியிலும் நிறுவனத்திலும் உள்ள காது கருவிகளுக்கும் வேறு உபகரணங்களுக்கும் சேதம் ஏற்படாத வகையில் நடந்து கொள்கின்றனரென்பதையும் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
   
19. பொதுமக்கள் கலரியில் இருக்கின்றபோது புகைத்தல், கதைத்தல், கைதட்டுதல், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல், பல்வேறுவிதமாக ஒலியெழுப்புதல், பகிடி பரிகாசம் செய்தல், அங்குமிங்கும் நடத்தல், நின்று கொண்டிருத்தல், விளையாடுதல், சைகை காட்டுதல், சபையை எட்டிப்பார்த்தல், விரல்களை கைகால்களை அல்லது வேறு பொருட்களை நீட்டுதல், பல்வேறு பொருட்களை சபைக்குள் வீசுதல், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையசைத்தல், குறிப்பாலுணர்த்துதல், நித்திரை செய்தல், குறிப்புகள் எழுதுதல், புத்தகங்கள் பத்திரிகைகள் வாசித்தல் போன்றவை முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளன.
   
20. பொதுமக்கள் கலரியில் இருக்கின்றபோது பாதுகாப்பு வேலிகளுக்கு மேல் பாய்தலும் பத்திரிகையாளர் கலரியில் அமர்தலுமாகாது. அத்துடன் பொதுமக்கள் கலரியில் கடமையில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உத்தியோகத்தர் அல்லது பெலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிடும் இடங்களில் அமர வேண்டும். சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் கலரியில் இருக்கின்றவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பாராளுமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு/ பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும்.
   
21. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க செயலாற்றாத ஆட்களை அல்லது குழுவினரை பாராளுமன்ற வளவிலிருந்து/கலரியிலிருந்து உடனடியாக அகற்றுவதற்கு பாராளுமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்/ பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கையெடுப்பார்கள்.
   
22. பொதுமக்கள் நுழைவாயில் அமைந்துள்ள பிரதேசத்தினூடாக அடிக்கடி வாகனங்கள் ஓடுவதால், கலரியிலிருந்து பொதுமக்கள் நுழைவாயிலுக்குத் திரும்பி வந்ததன் பின்னர் உங்களதும் உங்கள் குழுவினரதும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துதல் அத்தியாவசியமாகும். பொதுமக்கள் நுழைவாயிலிலிருந்து திரும்பி ஜயந்திபுர சோதனைச்சாவடி வரை உங்களையும் உங்கள் குழுவினரையும் கொண்டு செல்வதற்கான பஸ் வண்டி வரும்வரை அமைதியாக இருக்கும்படி உங்கள் குழுவினருக்கு அறிவுறுத்துக. குறிப்பாக உங்கள் குழுவில் பிள்ளைகளை அங்குமிங்கும் செல்லாமல் ஒழுங்காக வைத்திருப்பதில் கவனம் செலுத்துக.
   
23. தியவன்னா நதிக்கரையில் கூடி நிற்றல் ஆபத்தானது என்பதால் உங்கள் குழுவில் உள்ள பிள்ளைகளையும் ஏனைய உறுப்பினர்களையும் கரை ஓரத்தில் கூடிநிற்க இடமளிக்க வேண்டாம்.
   
24. பாராளுமன்றத்தைப் பார்வையிட்டுவிட்டு வெளிச்செல்கின்ற பொதுமக்களது வசதியை முன்னிட்டு பாராளுமன்றக் கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலுக்கு அருகிலும், பாராளுமன்றத்துக்கு முன்னாலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு அப்பால் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை வளவிலும் நினைவுப்பொருள் விற்பனை கூடங்கள் அமைந்துள்ளன. உங்களுக்குத் தேவையான நினைவுப் பொருட்களை அங்கே கொள்வனவு செய்யலாம்.
   
25. பாராளுமன்றத் தொகுதியின் பொதுமக்கள் நுழைவாயிலில் நினைவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீங்கள் கருதுவீர்களாயின், நாணயத்தாள்களை மாத்திரம் எடுத்துவருமாறும், பாராளுமன்றக் கட்டடத்தினுள் நாணயக்குத்திகளை எடுத்துவருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவிக்க விரும்புகிறேன்.

 

வாகனங்களின் பிரவேசம், தரித்துவைத்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய விசேட ஏற்பாடுகள்

 

மேற்படி 2 ஆம் பந்தியின் பிரகாரம் அனுமதி பெற்று அல்லது பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காகவே வருகைதரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய விருந்தினர்கள் வருகைதரும் வாகனங்கள் பாராளுமன்ற தொகுதிக்கு முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு எதிர்த்திசையிலுள்ள சிற்றுண்டிச்சாலை வளவில் அமைக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடத்திற்குள் உட்பிரவேசித்தல் வேண்டும். இவ்வாறு உட்பிரவேசிக்க முன்னர், பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக பெற்றுக்கொண்ட பூர்வாங்க அனுமதிப் பத்திரமொன்று இருப்பின் அதனை அவ்விடத்தில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையிலிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்றேல் தங்கள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இந்நடைமுறையை நிறைவேற்றிய பின்னரே தங்களது வாகனத்தை வாகனத் தரிப்பிடத்திற்குள் செலுத்த முடியும்.

 

பாடசாலை சீருடை அணிந்த மாணவர்களை ஏற்றிவரும் பேருந்துகள் தவிர ஏனைய வாகனங்களில் வருகைதரும் விருந்தினர்கள் மேற்படி 9 ஆம் பந்தியின் பிரகாரம் ஜயந்திபுர பாதுகாப்புச் சோதனை அலகுக்கு செல்ல வேண்டும். அவ்விடத்தில் இவர்கள் உடல் ரீதியான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், இதன் பொருட்டு மேற்படி பாதுகாப்புப் பிரிவிற்கு தங்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

பாடசாலை சீருடை அணிந்த மாணவர்களை ஏற்றிவரும் பேருந்துகளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ் வாகனத் தரிப்பிடத்திலிருந்து உடல் ரீதியான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துவதற்காக குறித்த இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அவ்விடத்தில் பாடசாலை மாணவர்களும் அவர்களை அழைத்துவரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் உடல் ரீதியான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் வருகைதரும் பேருந்துகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். பின்னர், குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டதன் பின்னர், பாடசாலை மாணவர்களும் அவர்களை அழைத்துவருபவர்களும் மீண்டும் அப்பேருந்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்பதுடன் அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் பேருந்து ஜயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலின் ஊடாக, குறிப்பிட்ட பாதுகாப்புச் சோதனை மற்றும் பதிவு செய்யப்பட்டதற்கிணங்க, பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் பொதுமக்கள் நுழைவாயிலிற்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பொருட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் தமது உச்சமட்ட ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

 

பாராளுமன்ற கட்டடத்தின் பொதுமக்களின் நுழைவாயிலிற்கு அருகே, மாணவர்கள் மற்றும் ஏனையவர்களை இறக்கிவிட்ட பின்னர் அங்கு வருகை தருகின்ற பொலிஸ் உத்தியோகத்தருடன் பஸ் வண்டி மீண்டும் ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக மேற்படி பஸ் தரிப்பிடத்திற்கு அனுப்பப்படுவதுடன், மீண்டும் அழைக்கப்படும் வரை அங்கு நிறுத்திவைத்திருத்தல் வேண்டும். மேற்படி வாகனத் தரிப்பிடத்தில் வழங்கப்படுகின்ற வாகன ரோகன் அட்டையின் ஒரு பகுதியை சாரதி வசமும், மற்றைய பகுதியை வருகை தருகின்ற குழுவுக்குப் பொறுப்பான அதிபர் அல்லது பொறுப்பான ஆசிரியர் வசமும் வைத்திருத்தல் வேண்டும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இந்த பஸ் வண்டிகளை பாராளுமன்ற வளவில் அல்லது வருகைதரும் வீதியின் இருபுறமும் நிறுத்திவைத்தல் முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தைப் பார்வையிட்டு பொதுமக்கள் நுழைவாயிலுக்கு மீண்டும் வருகை தந்த பின்னர் மேற்படி ரோகன் அட்டையைப் பயன்படுத்தி, மக்கள் உட்பிரவேசிக்கின்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பஸ் வண்டியை அவ்விடத்திற்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள். அவ்வாறு வருகைதரும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் ஜயந்திபுர பாதுகாப்பு பரிசோதனைப் பிரிவின் ஊடாக உரிய பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் பதிவுகளை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மேற்படி பஸ் வண்டிகள் பொது மக்கள் உட்பிரவேசிக்கின்ற இடத்திற்கு அனுப்பப்படும்.

 

மேற்படி பஸ் வண்டிகள் பாராளுமன்ற வளவிலிருந்து வெளியே செல்லும் போது அழைத்து வருகின்ற பொலிஸ் உத்தியோகத்தருடன் ஜயந்திபுர பிரதான நுழைவாயில் ஊடாக செல்ல வேண்டும் என்பதுடன், மேற்படி நுழைவாயிலில், அழைத்துவரும் பொலிஸ் உத்தியோகத்தர் பஸ்ஸிலிருந்து இறங்கிய பின்னர் பாராளுமன்ற வளவிற்கு வெளியே செல்லல் வேண்டும்.

 

விருந்தினர் எவரேனும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் போது, ஜயந்திபுர நுழைவாயில் தவிர வேறு எந்தவொரு நுழைவாயிலையும் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விருந்தினர் ஒருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது பணியாட்டொகுதி அங்கத்தவர் ஒருவர் வருகைதருவாராயின் அவர்களும், ஜயந்திபுர நுழைவாயிலை மாத்திரம் பயன்படுத்தல் வேண்டும். தமது ஆள்அடையாளத்தை உறுதிசெய்த பின்னர் மற்றும் உடற்பரிசோதனையின் பின்னர், தாம் வருகை தந்த வாகனம் அல்லது பாராளுமன்ற பஸ் சேவையைப் பயன்படுத்தி பொது மக்கள் நுழைவாயில் வரை செல்ல முடியும். இவர்கள் பாராளுமன்றத்தின் வேறு நுழைவாயில்களுக்குச் செல்வது முற்றாகத் தடையாகும்.

 

முன்னனுமதி இன்றி பாராளுமன்றத்தைப் பார்வையிட மாத்திரம் வருகைதருகின்ற விருந்தினர்கள் மற்றும் பாடசாலை சீருடையில் வருகைதருகின்ற மாணவர்களைக் கொண்ட குழுக்களும், மேற்படி ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பாராளுமன்றத்தின் பொதுமக்கள் நுழைவாயில் வரை வருகைதர முடியும் என்பதுடன் அதன் பின்னர், தமது ஆள்அடையாளத்தை உறுதி செய்த பின்னர் மேற்படி இடத்தில் பொதுமக்கள் வரவேற்புக் கருமபீடத்திலிருந்து பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான மஞ்சள் நிற விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முன்னனுமதிபெற்றுக் கொண்டு வருகைதருகின்ற விருந்தினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வெள்ளை நிற அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

 

இந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற கலரிக்கு வெளியே எந்தவொரு இடத்திற்கும் செல்வது முற்றாகத் தடையாகும்.

2023-09-22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom