'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது |
திகதி : | 2025-05-19 |
தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பௌத்த சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு கடந்த மே 16ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பணியாளர்கள் மற்றும் ஒன்றிணைந்த சேவைகளின் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த பக்தி கீதம் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, எமது கலாசாரம் பௌத்த போதனைகளின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும், இலங்கையர்கள் நாகரீகம் மிகுந்த மக்களாக மாறுவதற்குப் பௌத்த போதனைகள் பெரும் உறுதுணையாக இருந்தது என்றும் கூறினார். அத்துடன், அரசாங்க நிர்வாகத்திலும், அன்றாடம் மேற்கொள்ளும் பணிகளிலும், சாதாரண வாழ்க்கையிலும் பேராசை, வெறுப்பு என்பவற்றை இல்லாமல் செய்ய முடிந்தால், அதில் நாம் வளர்க்கும் ஞானத்தின் மூலம் பற்றுதல் இல்லாமல் செயல்பட முடியும் என்று கௌரவ சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், பாராளுமன்றப் பணியாளர்கள் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட இலங்கையர்களாக சிறிய குடும்பமாக இருப்பதாகவும், அவர்களுக்கிடையில் காணப்படும் இன, மத நல்லிணக்கம் இந்த பக்தி கீத இசைநிகழ்வு போன்றவற்றின் ஊடாக வெளிப்படுவதாகவும் இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். மிகவும் வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் நாயகம் மேலும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வுக்கு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் நிதியம், நெஸ்லே லங்கா லிமிடெட், இலங்கை வங்கியின் பாராளுமன்றக் கிளை, பெரேரா அன்ட் சன்ஸ் பேக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களும், திருமதி உதேனி முத்துக்குட மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நிதியுதவி மற்றும் அனுசரணைகளை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பௌத்த விவசார ஆணையாளர் சுனந்த காரியப்பெரும, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் இணைந்த சேவைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















