இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 19 உறுப்பினர் வெற்றிடங்கள், கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்கள் 4, பாராளுமன்றம் கூடிய நாட்கள் 390

திகதி : 2024-10-03

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டதுடன், இதற்காக 18 சந்தர்ப்பங்களில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அமைய 241 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ ஜயந்த கெட்டகொட இராஜினாமாச் செய்ததுடன், இவருக்குப் பதிலாக கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் நியமிக்கப்பட்டார். அத்துடன், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டார். இதேபோன்று, கௌரவ முஜிபுர் ரஹ்மான் இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறுப்புரிமையை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், கௌரவ ஹரீன் பெர்னான்டோவின் வெற்றிடத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

மிகவும் தனித்துவமான நிகழ்வுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன், 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டமையாகும். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கௌரவ ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

இல. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மற்றும் விலகுவதற்கான காரணம் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்
இராஜினாமாச் செய்தமை
01 கௌரவ ஜயந்த கெட்டகொட கௌரவ பசில் ராஜபக்ஷ
02 கௌரவ அஜித் நிவாட் கப்ரால் கௌரவ ஜயந்த கெட்டகொட
03 கௌரவ மஹிந்த சமரசிங்க கௌரவ லலித் வர்ணகுமார
04 கௌரவ பசில் ராஜபக்ஷ கௌரவ தம்மிக பெரேரா
05 கௌரவ முஜிபுர் ரஹ்மான் கௌரவ ஏ.எச்.எம்.பௌசி
06 கௌரவ சமிந்த விஜேசிறி கௌரவ நயன வாசலதிலக
07 கௌரவ உத்திக பிரேமரத்ன கௌரவ எச்.சீ.முத்துகுமாரன
08 கௌரவ தலதா அதுகோரள கௌரவ கருணாரத்ன பரனவிதானகே
அரசியலமைப்பின் 89 மற்றும் 91 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய தகுதி நீக்கம் செய்யப்படல்
09 கௌரவ ரஞ்ஜன் ராமநாயக கௌரவ அஜித் மான்னப்பெரும
10 கௌரவ டயனா கமகே கௌரவ முஜிபுர் ரஹ்மான்
கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை
11 கௌரவ நசீர் அஹமட் கௌரவ அலி சாஹிர் மௌலானா
12 கௌரவ மனுஷ நாணயக்கார கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
13 கௌரவ ஹரீன் பெர்னாந்து -----
உயிரிழந்தமை
14 கௌரவ அமரகீர்த்தி அதுகோரல கௌரவ ஜகத் சமரவிக்ரம
15 கௌரவ சனந் நிஷாந்த கௌரவ ஜகத் பிரியங்கர
16 கௌரவ எச்.நந்தசேன கௌரவ எம்.ஜே.வீரசேன
17 கௌரவ இரா.சம்பந்தன் கௌரவ கே.எஸ்.குகதாசன்
ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை
18 கௌரவ ரணில் விக்ரமசிங்க கௌரவ வஜிர அபேவர்தன
19 கௌரவ அநுர குமார திசாநாயக்க கௌரவ லக்ஷ்மன் நிபுணாரச்சி

 

அத்துடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர்கள் நான்கு தடவைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 5 கூட்டத்தொடர்கள் காணப்பட்டன. 2020.08.20 முதல் 2021.12.12 வரை முதலாவது கூட்டத்தொடரும், 2022.01.18 முதல் 2022.07.28 வரை இரண்டாவது கூட்டத்தொடரும், 2022.08.03 முதல் 2023.01.27 வரை மூன்றாவது மூட்டத்தொடரும், 2023.02.08 முதல் 2024.01.26 வரை நான்காவது கூட்டத்தொடரும், 2024.02.07 முதல் 2024.09.24 வரை ஐந்தாவது கூட்டத்தொடரும் நடைமுறையில் இருந்தன. இந்த ஐந்து கூட்டத்தொடர்களிலுமாக ஒன்பதாவது பாராளுமன்றம் மொத்தம் 390 நாட்கள் கூடியிருந்தன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom