இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புதிய ஜனாதிபதி கௌரவ அநுர குமார திஸாநாயக அவர்களுக்கு சபாநாயகர் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் வாழ்த்துத் தெரிவிப்பு

திகதி : 2024-09-24

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ அநுர குமார திஸாநாயக அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டை எதிர்கால உலகத்தை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்கவை இலங்கைப் பிரஜைகள் தெரிவுசெய்துள்ளார்கள் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக அவர்கள் வெற்றிபெறுவதற்கு நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது வாக்குகளை மிகவும் அமைதியான முறையில் பயன்படுத்தியிருப்பதன் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது தனது அவதானிப்பு என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மோசமான தேர்தல் வன்முறைகள் இன்றி இதுபோன்ற பெறுபேற்றைப் பெற்றமைக்கான கௌரவம், வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்த எமது ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு, முப்படையினர், பொலிஸார் தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர், பொது மக்கள் ஆகியோருக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த உண்மையான வெற்றி என்றும் சபாநாயகர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கை ஒரே இரவில் ஏற்பட்டதொன்றல்ல என்றும், பாராளுமன்ற ஜனநாயகத்தில் நீண்டகாலம் ஈடுபட்டதனால் ஏற்பட்ட விளைவின் பலன் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவர் முன்னிலையில் காணப்படுவது இலகுவான சவால் அல்ல என்பதுடன், எமது சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பின் மாறுபாடுகளை நன்கு அறிந்திருந்தாலும், உலகளாவிய பூகோள அரசியல் போக்குடன் முரண்படாமல் திசாநாயக அவர்களுக்கு இந்த நீண்டகாலப் பயணத்தை நிலையான முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாடு உள்ளது என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் இலங்கை ஆரம்பிக்கும் இந்தப் புதிய பயணத்திற்கு தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சபாநாயகர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகிய பாராளுமன்ற செயலாளர் குழாமும், இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ அநுர குமார திஸாநாயகவுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom