இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நியூசிலாந்து சபாநாயகர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தனர்

திகதி : 2024-07-10

நியூசிலாந்துப் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ ஜெரி ப்ரவ்ன்லி உள்ளிட்ட நியூசிலாந்து பாராளுமன்ற தூதுக்குழுவினர் இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (ஜூலை 09) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

நியூசிலாந்துப் பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களான காலோஸ் சீயெங், அண்டி பொஸ்டர், குஷ்லா டன்காரி மனுஎல் மற்றும் லோரன்ஸ் ஷுனேன் ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் இணைந்திருந்தனர்.

இரு நாடுகளின் பாராளுமன்ற முறைமை, பொருளாதார விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரண்டு சபாநாயகர்களும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கிடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை மேலும் விருத்தி செய்துகொள்வதற்கு இரண்டு நாடுகளின் சபாநாயகர்களும் உறுதியளித்தனர். அத்துடன், இந்நாட்டுக்கு விஜயம் செய்தமை தொடர்பில் நியூசிலாந்து சபாநாயகருக்கு இலங்கை சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அதனையடுத்து, தூதுக்குழுவினர் இலங்கை - நியூசிலாந்துப் பாராளுமன்ற நட்புறவுச்சங்கம் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய நியூசிலாந்து சபாநாயகர் தெரிவிக்கையில், இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கிடையில் காணப்படும் பாராளுமன்ற, வர்த்தக, விளையாட்டு போன்ற ஒவ்வொரு துறையிலுமான இரு தரப்பு தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இலங்கை - நியூசிலாந்துப் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிரோஷன் பெரேரா குறிப்பிடுகையில், இந்த விஜயம் மூலம் வலயத்தில் பழைமையான ஜனநாயகத்தைக் கொண்ட இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மேலும் வலுப்பெறுவதாகத் தெரிவித்தார். அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு உள்ளிட்ட வர்த்தகத் துறையிலான தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இரு நாடுகளினதும் கிரிக்கெட் மற்றும் ரக்பி விளையாட்டுத் துறையில் காணப்படும் தொடர்புகளையும் தலைவர் நினைவு கூர்ந்தார்.

அத்துடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குறிப்பிடுகையில், கடந்த ஆண்டில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியூசிலாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இந்நாட்டுப் பெண்களின் மேம்பாட்டுக்காகப் பல புதிய பரிந்துரைகளை முன்வைக்க முடிந்ததாகச் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்டவாக்கத்தில் பாரிய பணிகளை மேற்கொள்ள இந்த ஒன்றியத்துக்கு முடிந்ததாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

தூதுக்குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இந்நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் மதிய உணவு விருந்திலும் கலந்துகொண்டனர்.

அதனையடுத்து, பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட நியூசிலாந்து சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்ற விசேட விருந்தினருக்கான கலரிருக்கு வருகைதந்து பாராளுமன்ற அமர்வையும் பார்வையிட்டனர்.

அத்துடன், நியூசிலாந்துப் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ ஜெரி ப்ரவ்ன்லி பாராளுமன்றத்தின் விசேட விருந்தினருக்கான குறிப்புப் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், இலங்கை - நியூசிலாந்துப் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

 

12

34

56

78

910

11

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom