உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்கான தொட்டிகள் அன்பளிப்பு |
திகதி : | 2024-06-05 |
- இலங்கைக்கு மாதமொன்றில் இறக்குமதி செய்யப்படும் 800 தொன் பெட் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் ஆறுகள், ஓடைகளில் சேருகின்றன - சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும
ஜூன் மாதம் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்கான தொட்டிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (ஜூன் 05) நடைபெற்றது.
சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எண்ணக்கருவுக்கு அமைய பாராளுமன்ற வளாகத்தில் அகற்றப்படும் பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரிப்பதற்கான தொட்டிகள் கொக்கா கோலா நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்தத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் எக்கோ ஸ்பின்டல் தனியார் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு, இதன் ஊடாகக் கிடைக்கும் நிதி பாராளுமன்ற பணியாளர்களின் நலன்புரிச் செயற்பாடுகளுக்கு அவர்களினால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அற்ற மாவட்டங்களாக மாற்றும் குறித்த மேற்பார்வைக் குழுவின் முன்மாதிரித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பெட் போத்தல்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்த இந்நாட்டிலுள்ள பிரதான நிறுவனத்துக்கு நியாயமான விலையில் வழங்குவதன் ஊடாக பாராளுமன்ற வளாகத்தில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை 100 வீதத்தினால் குறைப்பது உறுதி செய்யப்படும்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் காலத்திற்கு அவசியமானது எனச் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும் என்றார். அத்துடன், கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் நாட்டின் செல்வம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கும் இவ்வாறான திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும குறிப்பிடுகையில், மாதமொன்றில் குழு அமர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பாராளுமன்றத்தில் ஏறத்தாழ 4000 பிளாஸ்டிக் போத்தல்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும், ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார். இலங்கைக்கு 1600 தொன் பெட் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மாதமொன்றுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் உற்பத்திக்காக 400 தொன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மேலும் 400 தொன்கள் மீள்சுழற்சிக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், மேலும் 800 தொன்கள் பயன்பாட்டின் பின்னர் ஆறுகள், ஓடைகள் மற்றும் கால்வாய்களில் வீசப்படுவதாகவும், இவற்றை சேகரிப்பதற்கு இது போன்ற திட்டங்கள் அவசியமானது என்றும் தெரிவித்தார். மேலும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பிளாஸ்டிக் அத்தியாவசியமானதொன்றாக மாறியிருப்பதாகவும், அதனை முறையாக கையாள்வது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
அத்துடன், பாராளுமன் குழு அமர்வுகளின் போது கண்ணாடிப் போத்தல்களைப் பயன்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த போத்தல்களை சேகரிக்க வழமையாக வரும் மோட்டார் சைக்கிள் கூட சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் எனவும் கௌரவ மன்னப்பெரும சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ அகில எல்லாவல, கௌரவ வருண லியனகே மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்ட அதிகாரிகளும், கொக்கா கோலா – இலங்கை நிறுவனத்தின் சார்பில் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளும், எக்கோ ஸ்பைன்டல் தனியார் நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாந்த மாலிம்பட உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்













