எதிர்காலத்துக்குத் தேவையான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை மாணவர் பாராளுமன்றங்களின் ஊடாக சட்டவாக்கத்திற்கு முன்வைக்க முடியும் – கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க |
திகதி : | 2023-10-11 |
- நாட்டின் உயிர்நாடி இலங்கை பாராளுமன்றம் - இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு
எதிர்காலத்துக்குத் தேவையான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை மாணவர் பாராளுமன்றங்களின் ஊடாக சட்டவாக்கத்திற்கு முன்வைக்க முடியும் என கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்நாட்டிலுள்ள அனைத்து மாணவர் பாராளுமன்றங்களையும், இலங்கைப் பாராளுமன்றத்தையும் ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரின் பங்களிப்பில் நேற்று (ஒக். 10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வை ஆரரம்பித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்திற்கு பாராளுமன்றத்தின் நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இதற்கமைய இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சபாநாயகர், பிரதமர், அமைச்சர்களின் தெரிவு இடம்பெற்றது. இதனைத் தெடர்ந்து மாணவர் பாராளுமன்ற பிரதமர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிச் சத்தியம் செய்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்நாட்டின் உயிர் நாடியாக இலங்கைப் பாராளுமன்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இல்லாத நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்படும் என்று சுட்டிக்காட்டிய சபாநாயகர், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் மதிப்புப் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானது என்றார்.
அத்துடன், மாணவர் பருவத்திலிருந்து பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதன் அவசியத்தை விளக்கும் நோக்கில் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெளிவுபடுத்தலை வழங்கினார். மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன குறிப்பிடுகையில், இலங்கையின் சட்டவாக்கத்தின் பிறப்பிடத்திலிருந்து (தற்போது ஜனாதிபதி செயலகம்) இந்த மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்தக் கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும் என்றார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவிக்கையில், ஒரு நாட்டின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகளை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்ததுடன், பாடசாலையின் வளர்ச்சிக்கு மாணவர்கள் நிரந்தர கொள்கைகளைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் நதீக தம்கொல்ல ஆகியோருக்கு கல்லூரியின் சார்பில் நினைவுச் சின்னங்கள் பரிசளிக்கப்பட்டன. அத்துடன், மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கல்லூரியின் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அது மாத்திரமன்றி பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் குறித்த கல்லூரிக்குப் பரிசுப்பொதிகளும் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய மதத் தலைவர்கள், இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் கப்டன் நீல் தம்மிக்க வதுகாரவத்த, பிரதி அதிபர், ஆசிரியர் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் குழு உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











