“அமைப்பை மாற்ற வேண்டுமாயின் அமைப்புக்கான கட்டமைப்புக்குள் நுழையவேண்டும்” துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து செயற்படத் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவிப்பு |
திகதி : | 2023-05-13 |
- உலகில் முதல் தடவையாக இளைஞர்களுக்கு இவ்வாறான வாய்ப்புக் கிடைக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் – ஜனாதிபதி
அமைப்பை மாற்ற வேண்டுமாயின் அமைப்புக்கான கட்டமைப்புக்குள் நுழையவேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து செயற்படத் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (மே 13) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பணிகளுக்கு அப்பால் இளைஞர் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது உலகில் இதுவே முதல் தடவையாகும் எனக் குறிப்பிட்டார். இது ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் எனவும், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளுக்கு அமைய இந்த இளைஞர் பிரதிநிதித்துவத்தின் பங்களிப்பானது பாராளுமன்றக் குழுக்களின் கண்காணிப்பாளர்கள் போல் அன்றி, உறுப்பினர்களைப் போன்றதாகவே அமையும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனவே, குழுவின் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் அறிக்கைக்கு மேலதிகமாக இந்த இளைஞர் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால் அமைப்பை மாற்றுவதற்கு அமைப்புக்கான கட்டமைப்புக்குள் முதலில் இணைந்துகொள்ளவதற்கு இது சிறந்ததொரு சந்தர்ப்பமாகும் என்றும் தெரிவித்தார்.
இளையோருக்கு வழங்கியுள்ள இந்த வாய்ப்பினால் புதிய பங்கேற்பு ஜனநாயகக் கட்டமைப்பொன்றிற்குள் நாம் புகுந்துள்ளோம் என இங்கு உரையாற்றிய பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார். அந்த வகையில் பங்கேற்பு ஜனநாயகத்தின் ஊடாக ஆழமான மற்றும் புதிய அரசியல் அத்தியாயமொன்றுக்குச் செல்வதற்கான பொறுப்பு இளைஞர்களுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இந்த நாடு இரண்டு இளைஞர் கிளர்ச்சிகளுக்கும் முப்பது வருட யுத்தத்திற்கும் முகம் கொடுத்துள்ளதாகவும், அதனால் நாடு மிகவும் துரதிஷ்டமான காலங்களை கடந்து முன்னோக்கி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, பாராளுமன்றக் குழுக்களில் இணையும் இந்த இளம் பிரதிநிதிகளிடமிருந்து அறிவார்ந்த பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது, அதன் மூலம் வெற்றிகரமான எதிர்கால வேலைத்திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், இந்தச் சந்தர்ப்பம் நாட்டின் எதிர்காலத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்புவதாகவும், எனவே, எதிர்க்காட்சி என்ற ரீதியில் இந்த நடைமுறையை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா கொபோட்டோ கருத்துத் தெரிவிக்கையில், சட்டவாக்கம், கண்காணிப்பு, பிரதிநிதித்துவம் மற்றும் வரவுசெலவுத் திட்ட ஆய்வு உட்பட உலகளவில் அனைத்து பாராளுமன்றங்களின் அடிப்படை செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் UNDP கவனம் செலுத்துகிறது என்றார். அதன் மூலம், அதன் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட மக்களின் விருப்பத்தையும் பிரதிநிதித்துவத்தையும் மேலும் மேம்படுத்தத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) தொழில்நுட்ப உதவியுடன் இலங்கை பாராளுமன்றத்தினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 விடயங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான இளைஞர் பிரதிநிதிகள் பத்திரிகை விளம்பரங்கள் வெளியிடப்பட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு அமைய இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் 550 பேர் இந்த செயலமர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் (சட்டவாக்கம்) டிக்கிரி கே.ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்

















