ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார் |
திகதி : | 2022-07-16 |
|
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2022 யூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருமாறு ஜனாதிபதிப் பதவியினை இராஜினாமாச் செய்திருப்பதனால் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 05வது உறுப்புரைக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 38(1) (ஆ) உறுப்புரைக்கு அமைய, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை குறித்து கௌரவ சபாநாயகருக்கு 2022ஆம் ஆண்டு யூலை 14ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தையும் செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார்.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது உறுப்புரைக்கு அமைய, பாராளுமன்றம் கலைக்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படும்போது, அவ்வாறான வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைப்பதாகச் செயற்படுதல் வேண்டும் ஏன்பதால், பாராளுமன்றச் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்காக என்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயலாளர் நாயகம் சபையில் வாசித்தார்.
அத்துடன், மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் 05வது உறுப்புரைக்கு அமைய இன்றைய தினக் கூட்டத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்கு முந்தாததும் ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான தினத்தை வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கான திகதியாக 2022 யூலை மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடி வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதி கருதி இதனுடன் தொடர்புடைய சட்டத்தின் 06வது உறுப்புரையில் உள்ள விடயங்களுக்கு அமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான விபரங்களையும் செயலாளர் நாயகம் சபையில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், மேலே குறிப்பிடப்பட்ட அறிவுப்புக்களைத் தொடர்ந்து மு.ப 10.15 மணிக்கு பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி மு.ப 10.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.