கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சுதந்திர தினச் செய்தி

திகதி : 2022-02-04

Print

இலங்கை சுதந்திரம் பெற்று 74வது வருட நிறைவு பெருமடையுடன் கொண்டாடப்படும் இன்றைய நாளில், உலகில் காணப்படும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தேசம் என்ற ரீதியில் நாமும் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். அன்று 1948ஆம் ஆண்டு நாம் ஒரே நாடு ஒரே தேசமாக முகங்கொடுத்து வெற்றிபெற்ற சுதந்திரத்துடன் ஒப்பிடுகையில் தற்பொழுது எதிர்கொள்ளும் சவால்கள் இரண்டாம் பட்சமாக அமைகின்றன.

பல வருடங்களுக்கு முன்னர் பல்வேறு இன, மத, குல பேதமின்றி பெயர் குறிப்பிடப்பட்ட மற்றும் பெயர் குறிப்பிடாத எண்ணற்ற மக்களின் முயற்சிகளின் விளைவாகவே அன்று 1948ஆம் ஆண்டு இதுபோன்றதொரு தினத்தில் பிரித்தானியவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அப்போது அவர்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலே போன்ற பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களாக ஒன்றிணைந்து போராடினார்கள். அவர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தி, கண்ணீரை சிந்தி, உயிரை தியாகம் செய்து நாட்டை காப்பாற்றியதாலேயே இன்று நாம் சுதந்திர தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றோம். எனவே, கடந்த காலம் முதல் இன்று வரை நாட்டைக் காப்பாற்ற தலையிட்ட அந்த உன்னத மனிதர்களின் ஆத்மா சாத்தியடைய, மதரீதியாக உங்கள் வணக்கங்களைச் செலுத்துவதற்கு, முதலில் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

எமது நாட்டில் காணக்கூடிய பன்முகத்தன்மை இன்று ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் பறக்கும் தேசியக் கொடியுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை. பிறப்பால் இந்நாட்டின் குடிமகன் இல்லாத திபெத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய எஸ்.மஹிந்த தேரரினால் மிகவும் இனிமையான தேச பக்திப் பாடல் எழுதப்பட்டுள்ளது. பல யுகங்கள் வாசிக்கப்பட்ட எமது போதனைக் கவிதை இலக்கியங்களான லோகோபகாரய, சுபாஷித, திருக்குறள், மூதுரை மற்றும் நல்வழி போன்ற தமிழ் போதனைக் கவிதை இலக்கியங்கள் ஆகியவற்றில் உத்வேகம் தெளிவாகத் தெரிகிறது. எமது சிங்கள தமிழ் சொற்களஞ்சியங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. அது மாத்திரமன்றி முஸ்லிம் சகோதர சகோதரிகள் தமது உயிர்களைப் பணயம்வைத்து நாட்டையும், மன்னர்களையும் காப்பாற்றியுள்ளனர். அவர்களில் சிலர் இந்நாட்டின் இயல்புகளால் கவரப்பட்டு, அக்கால உள்ளூராட்சியாளர்களின் நட்புணர்வால் இலங்கையில் குடியேறினர். இலங்கையின் நிலப்பகுதியில் காலூன்றிய அவர்கள் பக்தாத் மற்றும் ஏனைய இஸ்லாமிய நகரங்களுடன் இலங்கை சார்பில் இலக்கிய மற்றும் வணிகத் தொடர்புகளைப் பேணியமையை மறக்க முடியாது.  அது மாத்திரமன்றி வரவிருக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் வீட்டில் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் போர்த்துக்கீஸர்கள், டச்சு மற்றும் ஐரோப்பிய அடையாளங்களைக் கொண்டிருக்கும். நாம் இந்தப் பன்முகத் தன்மையை மதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட ஒரு சுதந்திரமான மனிதநேயவாதியினால் மட்டுமே அதன் அழகை அனுபவிக்க முடியும்.

உலகம் மீண்டும் துயரத்தில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் வேளையில் ஒற்றுமை, ஒருவருக்கு ஒருவர் பன்முகத்தன்மையைப் பாராட்டுவதன் ஊடாகவே இந்தச் சவால்களை நாம் அடைய முடியும். தனிமைப்படுத்தப்பட்ட முயற்சிகள் மூலம் இந்தப் பேரழிவைச் சமாளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இலங்கையின் குடிமக்கள் என்ற வகையில், வெறும் அழகுபடுத்தலுக்கு அப்பால் இவ்வாறான எல்லையற்ற சுதந்திரத்தை உலகில் விதைக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்கு உள்ளது. பெரியவர்களாகிய நாம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் சரியான வழியைக் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களாகும்.

அத்துடன், எமது உண்மையான சுதந்திரத்துக்கான திறவுகோள் பொருள் வளங்களிலிருந்து அன்றி ஆத்மீகத்திலேயே உள்ளது. இன்று நாம் இதயத்தில் நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு நாட்டிற்காக நமது கடமைகளையும் பொறுப்புகளையும் ஒன்றாக நிறைவேற்றும் சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறோம்!

"சுதந்திரம் ஒரு பெரிய கடல்

அதன் ஆதாரம் நீ மகனே

அதை மனதில் கொண்டு,

கடமையைச் செய்ய வேண்டும்!"

திபெத் நாட்டைச் சேர்ந்த மஹிந்த தேரர் நினைவுகூர்ந்த அந்த உறுதிப்பாட்டுடன், எதிர்காலத்தை வெல்வதற்கு உங்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

மஹிந்த யாப்பா அபேவர்தன,
சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்