புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 18ஆம் திகதி

திகதி : 2021-12-13

Print

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70ஆம் உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது அதிமேதகு ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள் (தெரிவுக் குழு) தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கமைய கடந்த 09ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது என்பதுடன், ஜனவரி 18ஆம் திகதி புத்தாண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும்.