இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை

திகதி : 2021-06-23

இலங்கையின் முன்னாள் பிரதமர் ஒருவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) உறுதியுரை எடுத்தார்.

அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

1977 இல் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் தெரிவான விக்ரமசிங்க அவர்கள் 08 வது பாராளுமன்றம் வரை தொடர்ந்து 42 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவு தடவை பிரதமராக பதவி வகித்துள்ளதுடன், கபினட் அமைச்சுப் பதவி, சபை முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

73 வயதான ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக 09 வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

1949 மார்ச் 24 ஆம் திகதி பிறந்த அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தார்.

1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.

1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரசிங்க அவர்கள் 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவிவகித்துள்ளார்.

அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். அவர் இலங்கையில் அதிக தடவை பிரதமராக பணியாற்றிய (5 தடவை) பிரதமராகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

விக்ரமசிங்க அவர்கள் இரண்டாவது முறையாக 2001 டிசம்பர் 09 ஆம் திகதி முதல் 2004 ஏப்ரல் 06 ஆம் திகதி வரையும், மூன்றாவது முறையாக 2015 ஜனவரி 09 முதல் 2015 ஆகஸ்ட் 17 வரையும், நான்காவது முறையாக 2015 ஆகஸ்ட் 17 முதல் 2018 ஒக்டோபர் 26 வரையும், ஐந்தாவது முறையாக 2018 டிசம்பர் 16 முதல் 2019 நவம்பர் 21 வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், இலங்கை பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்று இந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரே ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் 1980 முதல் 88 வரை கல்வி அமைச்சராக தொலைதூர ஆங்கில ஆசிரியர் பயிற்சி எனப்படும் டெலின் ஆசிரியர் பயிற்சி, பூரண கால தொலைதூர சேவை ஆசிரியர் பயிற்சி, பாடசாலைகளுக்கான பகலுணவு, மீப்பே அழகியல் நிறுவனத்தை ஆரம்பித்தல், முறைசாரா கல்வியை விரிவாக்குதல், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக மாவட்ட ஆசிரியர் சேவையை ஆரம்பித்தல், ஆசிரியர் சேவையை 60 வயது வரை நீடித்தல், பிக்குகளுக்கான ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை ஆரம்பித்தல், பாடசாலை மேற்பார்வை அலகுகளை உருவாக்குதல், பாடசாலை திட்டமிடல் அலகு, இலவச பாடப்புத்தக விநியோகம், வலயக்கல்வி அலுவலகங்களை நிறுவுதல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாணவர் ஆலோசனை சேவையை ஆரம்பித்தல் என்பன அவரது கல்வி மறுமலர்ச்சிகளாக குறிப்பிடமுடியும்.  அதற்கு மேலதிகமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு கல்வி கல்லூரி முறைமையை ஆரம்பித்த விக்ரமசிங்க அவர்கள் 1988 இல் 09 தேசிய கல்விக் கல்லூரிகளை ஆரம்பித்தும் மற்றும் கல்வி ஆய்வுக்காக தேசிய கல்வி நிருவாகத்தை நிறுவியும் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக கல்வியில் புதிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்தார்.

ஆழ்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வரலாறு, தொல்பொருள், சட்டம், பொருளியல், பௌத்தம் மற்றும் இலக்கியம், உலகளாவிய இலக்கியம் மற்றும் சுயசரிதையில் என்பன தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவராவார். பல்வேறு மதங்கள் மற்றும் தத்துவங்கள் தொடர்பில் அதிக ஆர்வம் கொண்ட அவர் திரிபிடகம், தம்மபத, பௌத்த இலக்கியம் மற்றும் அரசியல் கோட்பாடு தொடர்பில் 'அரசியல் மற்றும் தர்மம்' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அவரது பாரியார் களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கில கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியையான மைத்ரி விக்ரமசிங்க ஆவர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom