அரசாங்கச் சட்டமூலங்கள்
அரசாங்கச் சட்டமூலங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்
- சாதாரண சட்டமூலங்கள்
- அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலங்கள் - அரசியலமைப்பின் 82, 83 மற்றும் 84 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான, நீக்குவதற்கான மற்றும் மாற்றீடு செய்வதற்கான சட்டமூலங்கள்.
- ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
பாராளுமன்ற நடைமுறை
முதலாம் மதிப்பீடு
அரசியலமைப்பின் 78ஆம் உறுப்புரையின் பிரகாரம், சட்டமூலமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களுக்குப் பின்னர் நிலையியற் கட்டளை இல.50 இன் ஏற்பாடுகளுக்கமைய, ஓர் அமைச்சரவை அமைச்சர் அல்லது ஒரு பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முதலாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படும்.
ஆயினும், மாகாண சபை நிரலிலுள்ள விடயத்துடன் தொடர்புபட்ட சட்டமூலமாயின், அச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னரும், பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்கு முன்னரும் சனாதிபதியால் மாகாண சபைகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.
முதலாம் மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலத்தை அச்சிடுவதற்கான கட்டளை பாராளுமன்றத்தினால் விடுக்கப்படும்.
இரண்டாம் மதிப்பீடு
50 மற்றும் 55(1) ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கமைய முதலாம் மதிப்பீட்டிலிருந்து ஏழு நாட்கள் கடந்த பின்னர் இரண்டாம் மதிப்பீட்டிற்காக சட்டமூலம் ஒழுங்குப் பத்திரத்தில் இடப்படுகிறது. இரண்டாம் மதிப்பீட்டுத் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பின்வரும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் மதிப்பீட்டானது முதலாம் மதிப்பீட்டு திகதியிலிருந்து ஏழு நாட்களின் பின்னர் இடம்பெறமாட்டாது:-
| (அ) | அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரையின் கீழ் உயர்நீதிமன்றத்தில் சட்டமூலத்திற்கெதிராக மனுத்தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், நிலையியற் கட்டளை இல. 55(2)இன் ஏற்பாடுகளுக்கமைய நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னரே அவ்வாறான சட்டமூலமானது இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. |
| (ஆ) | அரசியலமைப்பின் உறுப்புரை 154 எ (5) அ இன் கீழ் அரசியலமைப்புக்கான (ஒருங்கியை நிரல்) ஒன்பதாம் அட்டவணையின் III ஆம் நிரலில் உள்ள விடயங்களுடன் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அத்தகைய சட்டமூலங்கள் நிலையியற் கட்டளை இல. 51(2)(அ) இன் பிரகாரம் சகல மாகாண சபைகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவைகளுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றன. அவற்றின் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னரே நிலையியற் கட்டளை இல. 51(2)(ஆ) இன் பிரகாரம் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறும். |
சட்டமூலமொன்றின் இரண்டாம் மதிப்பீட்டின்போது நிலையியற் கட்டளை இல. 56இன் பிரகாரம், சட்டமூலம் தொடர்பாக விவாதமொன்று இடம்பெறும். விவாதத்தின் இறுதியில் சட்டமூலம் வாக்கெடுப்புபொன்றினால் நிறைவேற்றப்படும். (குரல் வாக்கு/ வரி/ பெயர்) சட்டமூலமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டால் அச்சட்டமூலம் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தவிர்ந்த ஏனைய) முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு அல்லது குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க தெரிகுழுவொன்றுக்கு அல்லது சட்டவாக்க நிலையியற் குழுவொன்றுக்கு அல்லது பொருத்தமான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நிலையியற் கட்டளை இல. 57 இன் பிரகாரம் ஆற்றுப்படுத்தப்படும்.
சட்டமூலத்தின் குழு நிலை
நிலையியற் கட்டளை இல. 57 இன் பிரகாரம் முழுப் பாராளுமன்ற குழுவுக்கு சட்டமூலமொன்று ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்ற பட்சத்தில் நிலையியற் கட்டளை 93 தொடக்கம் 99 வரையான இலக்கங்களின் பிரகாரம் குழுவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குழுநிலையில் சட்டமூலத்தின் அனைத்து வாசகங்களும் குழுவில் கலந்துரையாடப்படுவதோடு புதிய திருத்தங்கள், நிலையியற் கட்டளைகள் இல. 59 முதல் 65 வரையின் பிரகாரம் சட்டமூலத்தின் வாசகங்களுக்கு பிரேரிக்கப்படலாம். சட்டமூலத்திற்கு புதிய வாசகங்களும் புதிய அட்டவணைகளும் பிரேரிக்கப்படும் பட்சத்தில் அவை இரண்டாம் முறையாக மதிப்பிடப்பட்டு அதன் பின்னர் சட்டமூலத்தின் சட்டவாசகமும் சட்டப்பெயரும் நிலையியற் கட்டளை 66இன் பிரகாரம் பிரிசீலிக்கப்படும்.
திருத்தங்களின் தன்மையானது நிலையியற் கட்டளை இல. 43, 44, 45 மற்றும் 46 என்பவற்றில் தரப்பட்டிருக்கின்றது. அனைத்து திருத்தங்களும் எழுத்து மூலமாக அமைந்திருக்க வேண்டுமென்பதோடு, நிலையியற் கட்டளை இல. 43(2)இன் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்கப்படுதல் வேண்டும்.
நிலையியற் குழுவில் / தெரிகுழுவில் பரிசீலித்தல்
சட்டமூலம் தெரிகுழுவொன்றுக்கு அல்லது சட்டவாக்க நிலையியற் குழுவொன்றுக்கு அல்லது பொருத்தமான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கின்றபோது நிலையியற் கட்டளை இல. 58 இன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு, குழு அறிக்கை செய்யும் வரை எவ்வித மேலதிக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டது.
குழுவின் அறிக்கை நிலையியற் கட்டளை இல. 68, 69 மற்றும் 70 இன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
சட்டவாக்க நிலையியற் குழுவின் நடவடிக்கைகள் நிலையியற் கட்டளை 113 இன் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றன.
தெரிகுழுவின் நடவடிக்கைகள் நிலையியற் கட்டளை 100 முதல் 110 வரையான இலக்கங்களின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றன.
மூன்றாம் மதிப்பீடு
சட்டமூலத்தின் பரிசீலனையை முழுப் பாராளுமன்றக்குழு பூர்த்தி செய்ததன் பின்னர் நிலையியற் கட்டளை இல. 67 இன் பிரகாரம் தவிசாளர் சட்டமூலத்தை திருத்தத்துடன் அல்லது திருத்தமின்றி பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வார்.
சட்டமூலம் நிலையியற் குழு அல்லது தெரிகுழுவொன்றில் பரிசீலனை செய்யப்பட்டால் குழுவின் பாராளுமன்றத்தில் பரிசீலனைசெய்யப்பட்டு அதன் பின்னர் சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு நிலையியற் கட்டளை இல. 71 முதல் 73 வரையின் பிரகாரம் நிறைவேற்றப்படும். மூன்றாம் மதிப்பீட்டிலும் வாக்கெடுப்பொன்று (குரல் வாக்கு/ வரி/ பெயர் மூலமாக) மேற்கொள்ளப்படும்.
சபாநாயகரின் சான்றிதழ்
நிலையியற் கட்டளை இல. 74 இன் பிரகாரம் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 79 அல்லது 80 இன் கீழ் சட்டமூலமானது (மூலப்பிரதி) சாபாநாயகரினால் புறக்குறிப்பீடு செய்யப்படுவதன் பேரில் சட்டமூலமொன்று சட்டமாக மாறும்.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலங்கள்
அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலமொன்றாயின் அச்சட்டமூலத்தின் விரிவுப் பெயரில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அரசியலமைப்புச் சட்டமூலமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதைத் தவிர்ந்த ஏனைய நடைமுறைகள் சாதாரண சட்டமூலங்களின் நடைமுறைகளை ஒத்தவை.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் நடைமுறைகளும் சாதாரண சட்டமூலங்களை ஒத்தவையே. எனினும், நிலையியற் கட்டளை இல. 75இன் பிரகாரம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பரிசீலனைக்காக இருபத்தாறு நாட்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடானது வரவு செலவுத் திட்ட உரையுடன் ஆரம்பிப்பதோடு, அதைத்தொடர்ந்து ஆகக் கூடுதலாக ஏழு நாட்கள் விவாதம் இடம்பெறும்.
இரண்டாம் மதிப்பீட்டுக்கு விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏழு நாட்களின் இறுதியில் ஒதுக்கீட்டு சட்டமூலமானது வாக்களிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பாராளுமன்றம் சட்டமூலத்திற்கு சார்பாக வாக்களித்தவுடன் அது முழுப் பாராளுமன்ற குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை
குழுநிலைக்கு ஆகக் கூடுதலாக இருபது நாட்கள் ஒதுக்கப்படுவதோடு ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்போது அனைத்து வாசகங்கள், தலைப்புகள் மற்றும் அட்டவணைகள் என்பன அதற்காக பிரேரிக்கப்பட்ட திருத்தங்களுடன் பரிசீலிக்கப்பட்டு 130ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுகின்றது. 28ஆம் இலக்க நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவ்வாறிருப்பினும் எந்தவொரு நிகழ்ச்சித்திட்டம், கருத்திட்டம் அல்லது செலவு விடயத்தின் தொகைக் குறைப்பிற்கான பிரேரணைக்கும் 130(9) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் முன்னறிவித்தல் தேவைப்படும்.
முழுப் பாராளுமன்றக் குழுவில் அனைத்து அமைச்சுக்களுக்குமான வாக்குகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சபை உடனடியாக அதன் அமர்வை ஆரம்பிக்கும். அதில் சட்டமூலம் குழுவில் திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுகின்றது. பின்னர் சட்டமூலம் மூன்றாம் முறையாக மதிப்பீடு செய்யப்படும். இச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர் குறிப்பிட்ட ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டால் அரசியலமைப்பின் உறுப்புரை 48(2) இன் பிரகாரம் அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







