இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) ஆராய்வு

திகதி : 2024-06-24

  • ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் ஏற்றுமதியைப் பரந்தளவில் மேம்படுத்துவதற்கு முயற்சிக்காமை தொடர்பில் குழு அதிருப்தி
  • வல்லபட்டை தாவரத்தை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினை குறித்து குழுவில் ஆராய்வு
  • விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பான கணக்காய்வு விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டமை குறித்து குழுவில் கவனம்
  • விவசாயிகள் அபிவிருத்தி சபையை அமைக்காமை தொடர்பில் குழுவில் ஆய்வு
  • விவசாய நிலங்களை நிரப்புவது தொடர்பில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய அறிக்கையை வழங்குமாறு அறிவுறுத்தல்


ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (ஜூன் 18) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் ஆராயப்பட்டது.

ஏற்றுமதியை பரந்த அளவில் அபிவிருத்தி செய்ய ஏற்றுமதி விவசாய திணைக்களம் முயற்சிக்காமை குறித்து குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. 2016ஆம் ஆண்டு குறித்த திணைக்களம் கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது, அவ்வருடத்தில் 0.5 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை 2020ஆம் ஆண்டாகும் போது ஒரு பில்லியன் டொலராக அதிகரிப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருந்தபோதும், திருப்தியடையும் அளவுக்கு இது நிறைவேற்றப்படவில்லையென குழு தெரிவித்தது. அது மாத்திரமன்றி இதுவரை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கப் போதியளவு முயற்சிகள் எடுக்கப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது.

பிராந்தியத்தில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

அத்துடன், வல்லப்பட்டை தாவரத்தை ஊக்குவிப்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. வல்லப்பட்டை தாவரத்தில் காணப்படும் முக்கியத்துவம் என்ன என்றும் குழு கேட்டறிந்துகொண்டது. இந்தத் தாவரம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தாவரமா என்றும் கேடுவிளைவிக்கும் தாவரமா என்றும் இங்கு வினவப்பட்டது. இந்தத் தாவரம் வாசனைத் திரவியத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், இதற்கு முன்னர் காணப்பட்ட கேள்வி குறைந்திருப்பதாகவும் வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் இந்தத் தாவரத்தைப் பயிரிடுவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாது என சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இதனை விவசாயப் பயிராக நியமிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்குமென நம்புவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், விவசாய அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான கணக்காய்வின் கேள்விகளுக்குப் பதில் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் கணக்காய்வு முகாமைக் குழுக் கூட்டங்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பப்பட்டது. எனவே, ஜூலை மாதத்துக்குள் 25 மாவட்டங்களில் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்களின் கூட்டங்களை நடத்துமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், விவசாய அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படாமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், விவசாயக் காணிகள் நிரப்பப்படுவது தொடர்பில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அறிக்கையொன்றைத் தயாரித்து வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தை முடித்துவைத்துக் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கௌவர லசந்த அழகியவண்ண குறிப்பிடுகையில், விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு கலந்துரையாடப்படாத விடயங்கள் குறித்து எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி மீண்டும் குழுவில் கலந்துரையாடப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ வீரசுமண வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் கௌரவ முதிதா பிரஷாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

5 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom