இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்போது ஒரு கிலோவுக்காக வியாபாரிகள் பெற்றுக் கொள்ளும் இலாபம் 100 – 1000 ரூபாவாகும் என வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

திகதி : 2024-04-04

  • கணக்காய்வாளர் நாயகத்தினால் நடத்தப்படும் தடயவியல் கணக்காய்வு முடிவடையும்வரை வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான இலத்திரனியல் வாகனங்கள் இறங்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அறிவுறுத்தல்
  • சேர் பெறுமதி வரியாக 188 பில்லியன் ரூபாவை வசூலிப்பதற்கு உள்நாட்டு இறைவரி சட்டத்துக்கு அமைய விரைவில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதமொன்றுக்கு 100,000 ற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்கள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்போது வியாபாரிகள் கிலோவொன்றுக்கு 100-1000 ரூபா வரையில் இலாபம் ஈட்டுவது வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரவணக்க தலைமையில் அண்மையில் (ஏப். 02) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.

இதில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிலோவொன்றின் சந்தை விலைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கி, வணிக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், இலங்கை சுங்கம், ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, ஹெக்டர் கொபேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2018 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்பட்ட வரி வருமானத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், அமெரிக்க டொலர் பெறுமதிக்கு ஏற்ப இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான அறவிடப்படும் விசேட பண்ட வரி பொருத்தமாக இல்லாமை இதற்குக் காரணம் என்றும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அதிக பணம் செலவாவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் கிடைக்காதபோதும், இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக இலாபத்தை ஈட்டுவதாகவும் தெரியவந்தது. கிலோவொன்றுக்கு 100-1000 ரூபாவரையில் வியாபாரிகள் இலாபமீட்டுவதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிலோவொன்றுக்கு சந்தை விலை மற்றும் விசேட பண்ட வரி அறிவிடப்பட்ட பின்னர் சுங்க வரி விலக்களிக்கப்பட்ட பின்னரான விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய வேறுபாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் வாரந்தோறும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் இலங்கை சுங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், 2525 பிரிவில் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களிடமிருந்து சேர் பெறுமதி வரியை அறவிடக்கூடிய வகையில் அவர்களைப் பதிவுசெய்தல் மற்றும் 7000 பிரிவின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இறக்குமதியாளர்களினால் சட்டத்துக்கு அமைய வரியை அறவிடுவதற்கு (super gain tax) மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை இம்மாத இறுதியில் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சுரண்டல் உச்சத்தை அடையும் அபாயம் இருப்பதால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலையீட்டின் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு பதிலாக, வர்த்தக அமைச்சு நேரடியாக இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும், சந்தை விலை மற்றும் ஆகக் கூடிய விற்பனை விலை என்பன இணையத்தளம், கையடக்கத்தொலைபேசி செயலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட தடயவியல் கணக்காய்வின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் கணக்காய்வுப் பணிகள் முடிவடையும் வரை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழிவகைகள் பற்றிய குழு பணிப்புரை வழங்கியது.

அத்துடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் நிலுவைகளை அறவிடுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

•    சேர் பெறுமதி வரியின் நிலுவைத் தொகையான 188 பில்லியன் ரூபாவை அறவிடுவதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை கையகப்படுத்தல்)

•    சட்ட நடவடிக்கை எடுப்பதன் காரணமாக 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட வரியை வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுத்தல்.

•    ஒரு கோடிக்கு மேல் வரி ஏய்ப்புச் செய்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வாரத்துக்குள் குழுவிடம் பெற்றுக்கொடுத்தல்.

•    ரமிஸ் (RAMIS) கட்டமைப்பைப் பேணுவதற்கு திறந்த கேள்விப்பத்திரம் கோரலின் கீழ் அரச தனியார் பங்குடமை மாதிரியொன்றைத் தயாரித்தல்.

•    ரமிஸ் (RAMIS)  கட்டமைப்புத் தொடர்பான கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத் தகவலை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிட முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தைக் குழுவுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
•    18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்த தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ளல்.


இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டபிள்யூ.டி. ஜே செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கெளரவ ஜயரத்ன ஹேரத், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ அலி சாஹிர் மௌலானா, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ காமினி வலேபொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom