கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன தலைமையில் முதலாவது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் கூட்டம் கூடியது |
திகதி : | 2024-03-20 |
- கோப் குழுவின் வரலாற்றில் முதல் தடவையாக புதிய குழு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், குழுவின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவரினால் விளக்கம்
- முதலாவது கூட்டத்துக்கு இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் அழைப்பு - 27 வருடங்களில் 4 வருடங்கள் மாத்திரமே கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது
- பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனதின் எதிர்கால வேலைத்திட்டத்தை உள்ளடக்கி 02 மாதங்களுக்குள் கூட்டுத் திட்டத்தைத் (corporate plan) தயாரிக்கவும் - கோப் குழுவினால் அறிவுறுத்தல்
- கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து கனிகளையும் நில அளவை செய்து, அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை வழங்கவும் - கோப் குழுவினால் அறிவுறுத்தல்
- பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனதின் ஊழியர்களுக்கான செலவு 75% - குழுவில் புலப்பட்டது
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் 363 நிறுவனங்களை அழைக்க முடியும் என்றாலும், 102 நிறுவனங்கள் குழுவின் முன் இதுவரை அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அவரது தலைமையில் நேற்று (மார்ச் 19) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கோப் குழுவின் நோக்கங்கள் மற்றும் குழுவின் இதுவரையான செயற்பாடுகள் குறித்து தலைவர் முழுமையான விளக்கமளித்தார். கோப் குழுவின் வரலாற்றில் புதிய தலைவர் ஒருவர் இவ்வாறு தெளிவுபடுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் இன்று கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்படி 27 வருடங்களில் இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் 4 வருடங்களில் மாத்திரம் இலாபம் ஈட்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து நட்டமடைந்து வரும் பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 தேயிலை தொழிற்சாலைகளில் 7 தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பதும் தெரியவந்தது. ஆனால், செயலிழந்த தேயிலை தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நட்டங்களுக்கு மூலதனப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம் என அதன் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், மூலதனம் இல்லாததால் உரம் மற்றும் அது சார்ந்த களைக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தாததும் நட்டத்திற்கு காரணம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு பிரதான காரணம் மூலதனப் பற்றாக்குறை மாத்திரமல்ல என குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியது. அதற்கமைய, பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் மிக அதிக ஊழியர் செலவு குறித்த தரவுகளை குழு சமர்ப்பித்ததுடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் செலவு சுமார் 75% எனத் தெரியவந்தது.
மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கிய பின்னர் ஏனைய தரப்பினர் கையகப்படுத்தியமை தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீட்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை உடனடியாக மீள் அளவீடு செய்யுமாறும், கூட்டுத்தாபனத்தினால் குத்தகை அடிப்படையில் இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது, காணிகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யார், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி, வரி அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பன உள்ளிட்ட விரிவான அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளாக 1.5 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, உடனடியாக தலையிட்டு உரிய கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்கி முடிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024-2028 காலப்பகுதிக்கான கூட்டுத் திட்டமொன்றும் குழுவில் முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாதது குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதனடிப்படையில் தமது நிறுவனத்தின் தேவையை அறியாமல் ஏனைய தரப்பினர் ஊடாக கூட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளமை குறித்த வருத்தம் தெரிவித்த குழுவின் தலைவர், உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய கூட்டுத் திட்டத்தை 02 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் தொடர்பில் முறையான தரவுக் கட்டமைப்பு இல்லாமை பற்றி அதிருப்தியை குழு வெளியிட்டதுடன், அது தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக குழுவிற்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








