இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சிறுவர் பகல்நேரப் பராமரிப்பு வசதிகள் பற்றிய தேசிய கொள்கை தொடர்பில் மாகாணப் பிரதம செயலாளர்களுடன் கலந்துரையாடல்

திகதி : 2024-02-28

  • மாகாண ஆளுநர்களின் அனுமதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு வசதிகள் பற்றிய தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாகாணப் பிரதம செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல தலைமையில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

13 ஆம் திருத்தத்துக்கு அமைய சிறுவர் சம்பந்தப்பட்ட விடயம் மாகாண சபைகளின் விடயப்பொறுப்பின் கீழ் வருவதால் இந்தத் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சட்டரீதியான சிக்கல்கள் தொடர்பில் குழுவின் முன்னைய அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, மாகாணப் பிரதம செயலாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துக்களைப் பெறும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் மாகாணப் பிரதம செயலாளர்கள், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும்,   வெரிட்டே ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அத்துடன், மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு ஆணையாளர்கள் ஒன்லைன் தொழிநுட்பத்தினூடாகவும் கலந்துகொண்டார்.  

அதற்கமைய, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை தொடர்பான விடயம் மாகாண சபைகளின் கீழ் வருவதாகத் தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, எவ்வாறாயினும் தற்பொழுது மாகாண சபைகள் நிறுவப்படவில்லை என்பதால் மத்திய அரசுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குழுவில் அறிவித்தார். அத்துடன், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தால் அதனை மாகாண சபைகளிலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இல்லை என இதன்போது மாகாணப் பிரதம செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு வசதிகள் பற்றிய தற்போதைய நடைமுறைகளை குழுவில் விளக்கமளித்த மாகாணப் பிரதம செயலாளர்கள் தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழு நாட்டுக்கும் பொதுவான நடைமுறையை செயற்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, இந்தத் தேசிய கொள்கையை மாகாண ஆளுநர்களுக்கும் முன்வைத்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல ஆலோசனை வழங்கினார்.

அதற்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கெதிரான வனமுறைகளை தடுப்பது தொடர்பிலும் அது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.   

இந்தக் குழுக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன மற்றும் கௌரவ டீ. வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom