வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடுவதற்கு இடமாளிக்காது அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்புக்கள் குறித்து ஆராயவும் - தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டு |
திகதி : | 2024-02-27 |
- பொதுவாக அபிவிருத்தியடைந்த நாடுகளின் மொத்த நிலப்பரப்பில் கைத்தொழில்களுக்கு நூற்றுக்கு 3 வீதம் ஒதுக்கப்படுகின்றபோதும் இலங்கையில் அந்தப் பெறுமதி நூற்றுக்கு 0.04 வீதமாகும் என்றும் தெரிவிப்பு
- உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ரமிஸ் கட்டமைப்புடன் காணிகள் பதிவாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை இணைக்குமாறு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும் அவை நிறைவேற்றப்படாமை குறித்து அதிருப்தி
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடுவதற்கு இடமாளிக்காது அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (பெப். 20) அவருடைய தலைமையில் கூடியபோதே இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
வாழைச்சேனை தொழிற்சாலையில் இயந்திரங்கள் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டவை என்றும் அவற்றைப் பழுதுபார்ப்பதற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும், திரைசேரியிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமையால் இதனை அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான காணியை சுற்றுலாத்துறைக்காக ஒதுக்குவதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இங்கு தெரிவித்தார்.
1.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து தொழிற்சாலையின் இயந்திரங்களைப் பழுதுபார்த்தால் நாளொன்றுக்கு 5 டொன் வீதம் உற்பத்தியை மேற்கொண்டு மாதமொன்றுக்கு 22 மில்லியன் ரூபா இலாபம் மீட்ட முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 340 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இதன் காணியை சுற்றுலாத்துறைக்கு முழுமையாக எடுக்காது அதில் ஒரு பகுதியை மாத்திரம் குறித்த தேவைக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடுவதாக இருந்தால் அதனை விற்பனை செய்வதற்குப் பதிலாக அரச தனியார் பங்குடமையாக நடத்துவதன் முக்கியத்துவத்தை குழு பரிந்துரைத்ததுடன், இது சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அத்துடன், சுற்றுலாத்துறையில் மாத்திரம் தங்கியிருப்பதற்குப் பதிலாக, நாட்டின் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்து அதன் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது முக்கியமானது என்றும் குழு வலியுறுத்தியது. இந்நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15 % மாத்திரமேயாகும், எனினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 30% என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு நூற்றுக்கு 0.04 வீதமாகும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 3% என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், தோல் கைத்தொழிலுக்காக விசேடமான வலயமொன்றை ஒதுக்குவது குறித்த பிரச்சினை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டையும் அபிவிருத்தி செய்வது குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், அரசிறைக்கொள்கைத் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையைக் கவனத்தில் கொண்டு, இந்நாட்டில் வரி வசூலிக்கும் செயற்பாட்டின் குறைபாடுகள் குறித்தும் குழுவின் தலைவர் கவனம் செலுத்தினார். அதிக வருமானத்தை ஈட்டும் நபர்கள் வரி வலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போது, குறைந்த வருமானத்தைப் பெறும் நபர்கள் மாத்திரம் அவற்றில் இணைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வரிக் கொள்கை இதனைவிட விரிவானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். உள்நாட்டு இறைவரி சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு நிதி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் முன்நின்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ரமிஸ் கட்டமைப்புடன், காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றை இணைத்துக்கொள்ளுமாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டபோதும் இதுவரையில் இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமை குறித்து குழுவின் தலைவர் விசனம் தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தற்காலிக வற்வரி பதிவு இலக்கம் வழங்கப்படுவதால் அரசாங்கத்துக்குப் பாரிய வரி இழப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அரசாங்கக் கணக்குகள் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, HDFC வங்கியின் 2020ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை, வர்த்தக வாணிப அமைப்பின் 2022ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை, இலங்கை ஒத்தியல் மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபை யின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை என்பனவும் இங்கு ஆராயப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








