இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சேர்பெறுமதி வரி திருத்த முன்மொழிவுகளைப் பின்பற்றுவது தொடர்பில் நிதி அமைச்சின் பின்னடைவு தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு கேள்வி, தலைவரின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது

திகதி : 2024-02-21

அனைத்து விலக்களிப்புக்களையும் நீக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கொண்டுவரப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சேர்பெறுமதித் திருத்தச்சட்டமூலத்தில் உள்வாங்க நிதி அமைச்சு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென அரசாங்க நிதி பற்றிய குழு கேள்வியெழுப்பியது. மருத்தவ உபகரணங்கள், நோயாளர்காவு வண்டிகள், உயர்ந்த புரதத்தைக் கொண்ட சிறுவர் உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு வரி விலக்களிப்பது குறித்து முன்மொழிவுகளைக் குழு முன்வைத்திருந்தபோதும் இதனை அமைச்சு கவனத்தில் கொள்ளாமை குறித்து தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்றுக் (பெப். 20) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமூலத்தின் ஊடாக குறித்த வரி 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்படுவதுடன், 2024 ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து பயனுறுவதாகச் சேர்பெறுமதி வரிக்கான பதிவுத் தொடக்கநிலையை ஆண்டொன்றுக்கு எண்பது மில்லியன் ரூபாவிலிருந்து 60 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், இந்த வரித் திருத்தத்தின் ஊடாக இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 % வரி வருவாயை ஈட்டுவது அரசாங்கத்தின் இலக்காக அமைந்துள்ளது. மேலும், வெளிநாட்டு டிஜிட்டல் மற்றும் மென்பொருள் வழங்குநர்கள் மீது வற் வரியை அமுல்படுத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது ஏன் என்றும், உள்ளூர் டிஜிட்டல் மற்றும் மென்பொருள் வழங்குநர்களுக்கு நியாயமற்ற சூழ்நிலையை உருவாக்குவது ஏன் என்றும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. உள்ளூர் பயண முன்பதிவு முகவர்கள் கூட வற் வரிக்கு உட்பட்டுள்ளபோதும், Booking.com போன்ற இணையதளங்களுக்கு  விலக்களிக்கப்பட்டுள்ளது. இது வெறும் சட்ட விளக்கத்தில் மாற்றமாக இருப்பதால், இதை ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் என்று அதிகாரிகளிடம் குழு கேள்வி எழுப்பியது. எனினும், புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரியிருப்பதாகவும், இது 2025 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வற் வரி தொடர்பான புதிய சட்டமூலம் வரையப்படும்வரை உரிய வரிகளை வசூலிப்பதற்கும் நியாயமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் ஒரு பொறிமுறையைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

மேலும், சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை (திருத்த) சட்டமூலம் குறித்தும் குழு கலந்துரையாடியது. 2024 ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து பயனுக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுக்கான பதிவின் மொத்த விற்பனை வரவின் தொக்க நிலையை ஆண்டொன்றுக்கு நூற்றி இருபது மில்லியன் ரூபாவிலிருந்து அறுபது மில்லியன் ரூபாவாகக் குறைப்பது குறித்த இச்சட்டமூலத்துக்கு குழு அங்கீகாரம் வழங்கியது.

இதில் உள்ள உள்ளார்ந்த திறமையின்மை மற்றும் நிர்வாகச் சுமைகளை மேற்கோள்காட்டிய குழுவின் தலைவர், இரண்டு தனித்தனியான வரி கட்டமைப்புகளை பராமரிப்பதன் தேவை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார். சேர்பெறுமதி வரியின் கீழ் இந்த வரிகளை ஒன்றிணைக்குமாறு பரிந்துரைத்த அவர், இது சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகையுடன் இணைந்தால் சராசரியாக 22% பயனுள்ள விகிதத்தை ஏற்படுத்தும் என்றார். இதற்குப் பதிலளித்த நிதியமைச்சு, வருவாய் இலக்குகளை அடைவதே அவர்களின் நோக்கம் என்றும், அனைத்து வரி செலுத்துவோரையும் மிகவும் திறம்படப் பிடிக்கும் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட வரி முறைக்கு மாறும் வரை இந்த அணுகுமுறையைப் பயன்படுத்த விரும்புவதாகவும் தெளிவுபடுத்தியது.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, 'சீனி மோசடி’ காரணமாக இழக்கப்பட்ட வருமானத்தை மீட்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இதனை வரி இழப்பு எனக் குறிப்பிட முடியாது என்றும், விசேட பண்டங்களுக்கான வரி 50 ரூபாவிலிருந்து 25 சதமாகக் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட குறைப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விளக்கம் வழங்கப்பட்டபோதும், ஆறு நிறுவனங்களிடமிருந்து 1.4 பில்லியன் ரூபாய் அளவுக்கு இந்த வரிச் சீர்திருத்தத்தின் மூலம் சமனிலையற்ற இலாபம் ஈட்டிய குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவித்ததுடுன், மேலும் ஆறு நிறுவனங்கள் இன்னும் விசாரிக்கப்பட உள்ளன என்றும் தெரிவித்தது.

உழைக்கும்போது செலுத்தும் வரி மற்றும் சேர்பெறுமதி வரி போன்றவை சராசரி மக்கள் மத்தியில் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் செலுத்தப்படாத வரிகளை மீட்பதில் அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். கூட்டிணைந்த வரி மூலம் முறைகேடாக சம்பாதித்த வரியில் 30% மட்டுமே திரும்பப் பெற முடியும் என்றும் மீதமுள்ள 70% ஐ தற்போதைய வரி கட்டமைப்பின் கீழ் திரும்பப் பெற முடியாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். எனவே, கடந்தகாலத்தில் செலுத்தப்படாதுள்ள வரிகளை வசூலிப்பதற்கான வழிகளை ஆராயுமாறும் அல்லது எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படாதிருப்பதற்கான சட்டங்களை இயற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு குழு, அதிகாரிகளை வலியுறுத்தியது. எவ்வாறாயினும், சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமூலம் மற்றும்  சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் வழங்கியபோதும், நிலைமைகள் குறித்து குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ துமிந்த திஸாநாயக்க, கௌரவ நிமல் லான்சா, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ மதுர விதானகே, கௌரவ சஹான் பிரதீப், கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom