நாட்டில் மூடப்பட்ட பண்ணைகளின் எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியுள்ளதாக கோபா குழுவில் புலப்பட்டது |
திகதி : | 2024-01-19 |
- மில்கோ நிறுவனத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் பாலின் அளவு வெகுவாக குறைந்துள்ளது - அமைச்சர் மஹிந்த அமரவீர
- திணைக்களத்தின் தரவுக்கட்டமைப்பை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை குழு வலியுறுத்து
- செயற்கை கருவூட்டல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பில் கவனத்திற்கு
- பால் உற்பத்திக்கான தொடர்பில் தேசிய கொள்கையை தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்து கவனத்திற்கு
- அவுஸ்திரேலியாவிலிருந்து இருந்து இனப்பெருக்கத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் உயிரிழந்தமை தொடர்பில் கவனத்திற்கு
இலங்கையில் 14000 க்கும் மேற்பட்ட பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி இது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் புலப்பட்டது. அத்துடன், இவற்றில் பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலான பண்ணைகள் எனவும் பெரும்பாலான பண்ணைகள் கால்நடைகள் திருட்டு காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கால்நடைகள் திருடப்படுவதால் சிறு விவசாயிகளின் மன உளைச்சலுக்கு ஆளாகி, பண்ணைகள் மூடப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இதன்போது கோபா குழு சுட்டிக்காட்டியது. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதும், காணி தொடர்பான பிரச்சினைகளும் இதற்குக் காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெளிவான தரவுகளை சரியாகப் பராமரிக்க வேண்டும் என கோபா குழு சுட்டிக்காட்டியது.
அதேபோன்று, தரவுகளைப் புதுப்பித்து தகவல் கட்டமைப்பை செயற்பாட்டு ரீதியாகப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தை 2023 ஜூலை 06 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைத்து வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் இந்தக் குழு அண்மையில் (ஜன. 11) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக்குழுவின் அழைப்பின் பேரில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீரவும் இதில் கலந்துகொண்டார். இந்நாட்டின் உள்நாட்டுப் பால் தேவை குறித்து குழு நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், மில்கோ நிறுவனத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் பால் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்ட பால் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இம்புலத்தண்ட மற்றும் தெலஹெர ஆடு இனப்பெருக்க மையங்களில் உள்ள அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் தற்பொழுது இறந்துள்ளமை குறித்து குழு கவனம் செலுத்தியது. கடந்த குழுக் கூட்டத்திலும் இது குறித்து கலந்துரையாடப்பட்டதால், இந்த ஆடுகளை களத்துக்கு விடுவதன் முன்னேற்றம் குறித்து வினவப்பட்டது. அதற்கமைய, ஒரு மாதத்திற்குள் எஞ்சியுள்ள இந்த கால்நடைகளை களத்துக்கு விடுவதற்கு தயார்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பான அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரை செய்தார்.
செயற்கை கருவூட்டல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ அசோக் அபேசிங்க மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









