இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சிறுவர் பகல்நேரப் பராமரிப்பு மைய வசதிகள் பற்றிய தேசிய கொள்கை துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

திகதி : 2024-01-18

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு மைய வசதிகள் பற்றிய தேசியக் கொள்கை தொடர்பில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல தலைமையில் அண்மையில் (ஜன. 09) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும், வெரிட்டே ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.  

முழு நாட்டுக்கும் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தேசியக் கொள்கை தற்பொழுது மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன், நாட்டில் இயங்கும் பகல்நேர பராமரிப்பு மையங்களை பதிவு செய்தல் மற்றும் ஒழுங்கப்படுத்துவது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று இல்லை என்றும், மாகாண சபைகளின் கீழ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால் பல்வேறு மாகாணங்களில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுவதாக இதன்போது குழுவில் புலப்பட்டது. இதனால் எந்த மாகாணத்தில் இருந்தாலும் சிறுவர்களின் பாதுகாப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால் கல்வி மற்றும் சுகாதாரம் போன்று முழு நாட்டுக்கும் ஒத்திசைவான பொறிமுறையொன்றே இதற்கும் அவசியமானது என இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

அதற்கமைய, மாகாணப் பிரதம செயலாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, பகல்நேர பராமரிப்பு மையங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக சப்ரகமுவ மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோடி வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இந்த முன்னோடித் திட்டம் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பெறுபேறுகளை ஆராய்ந்து அதற்கமைய எதிர்காலத் திட்டங்களை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பில் வெரிட்டே ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இந்த முன்னோடி வேலைத்திட்டம் தொடர்பில் சப்ரகமுவ மாகாணப் பிரதம செயலாளரின் அறிக்கை ஒன்றைக் கோருமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை குழுவின் முன்வைத்தனர்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ முதிதா பிரஷாந்தி, கௌரவ டீ. வீரசிங்க, கௌரவ வேலு குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

3 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom