இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

100 கிலோகிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி - நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட குழுவில் நீதி அமைச்சு தெரிவிப்பு

திகதி : 2023-12-19

  • போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறைகள் தொடர்பில் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் குழுவில் சமர்ப்பிப்பு

 

100 கிலோகிராம் போதைப்பொருட்களை குறித்த தினங்களில் அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதற்கமைய அதற்கான தினம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் நீதி அமைச்சு தெரிவித்தது.

குறித்த பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (டிச. 12) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த டிசம்பர் 15 வரை அரசாங்க நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் விசேட குழுவில் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பிரதிகள் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கமைய, மேற்படி குழுவுக்குப் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மேலும் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட வேண்டும் எனப் பாராளுமன்றத் தெரிவுக்குழு வலியுறுத்தியது.

போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம், அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போதான கைதுகளில் நிலவும் இடைவெளிகள் மற்றும் சிரமங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது.

போதைப்பொருள் தொடர்பான கைதுகளின் பின்னர் நீதித்துறை செயற்பாட்டில் உள்ள பலவீனங்கள் காரணமாகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூட சட்டத்திலிருந்து தப்பித்து வருகின்றனர் என்பதால் முறையான கொள்கை மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, கௌரவ புத்திக பத்திரன, கௌரவ மஞ்சுளா திசாநாயக, கௌவர முதிதா பிரசாந்தி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom