இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெளிநாட்டு சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் நடைமுறைத் திறன்களைக் கொண்ட விண்ணப்பதாரிகளை ஈர்ப்பதற்குத் தேவையான மாற்றத்தைச் செய்யவும் - சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

திகதி : 2023-12-07

  • புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சு சாதகமாகப் பார்க்க வேண்டும் – துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
  • வெளிநாட்டுத் தூதரகங்களின் உட்கட்டுமானத் தேவை வசதிகளுக்கான கொள்முதல் செயற்பாட்டின் சிக்கல் தன்மையைக் குறைக்கவும் குழுவினால் பரிந்துரை

 

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது நடைமுறைத் திறன்களைக் கொண்ட விண்ணப்பதாரிகளை ஈர்க்கும் வகையில் சம்பள அளவுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.

வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைகளில் உயர்ந்த புள்ளிகளைப் பெற்று நேர்முகப் பரீட்சைக்கு கணிசமானவர்கள் தகுதி பெறுகின்றபோதும், நாட்டின் சார்பில் சேவையாற்றுவதற்குத் தேவையான நடைமுறை அறிவு, திறன் மற்றும் ஆளுமை என்பன இந்த நேர்முகப் பரீட்சைகளில் பிரதிபலிக்கப்படுவதில்லையென குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (டிச. 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

ஆட்சேர்ப்புக்கான பரீட்சை மற்றும் கல்வி ரீதியான தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கணிசமானவர்கள் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டாலும், குறித்த சேவையை முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை அறிவு, திறன் மற்றும் ஆளுமைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் புள்ளிகளின் அடிப்படையில் அவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக வெளிவிகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை எதிர்மறையான பார்வையுடன்  நோக்கும் நிலைமையொன்று நாட்டில் காணப்படுவதாகவும், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

மற்ற நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் தமது நாட்டு மக்களை சாதகமாகப் பார்ப்பதாகவும், அத்தகைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்கள் அவர்களுக்கு சார்பாகச் செயற்படுகின்றன.  அதனால் அவ்வாறான சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இப்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உயர் பதவிகளை வகிக்கும் நிலையை எட்ட முடிந்திருப்பதாகவும் துறைசார் மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டியது. இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளைப் பெறுவது நீண்ட மற்றும் சிக்கல் நிறைந்த செயற்பாடு என்றும், இந்த சிக்கல் தன்மை குறைக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது. இது தொடர்பான கொள்முதல் செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக அமைந்தது.

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் முன்னெடுக்கப்படும் உள்ளிருப்புப் பயிற்சிகள் குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியதுடன், வெளிவிவகார அமைச்சினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ளிருப்புப் பயிற்சிகளின் பொறுப்புக்கள், வகிபாகம் மற்றும் இத்திட்டம் குறித்து குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறித்த குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், குழுவின் தலைவருடைய அனுமதியுடன் அவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

 

1 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom