இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாதுகாப்பு அமைச்சு கோபா குழு முன்னிலையில்

திகதி : 2023-12-05

  • பல்வேறு ஆண்டுகளாகக் காலதாமதம் அடைந்துவரும் ஆயுதங்கள் (திருத்தம்) மற்றும் வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டமூலங்களைத் திருத்துவதை விரைவுபடுத்தவும்.
  • முப்படையினரால் வெளித் தரப்பினருக்கு வழங்கப்படும் சேவையின் ஊடாக ஈட்டப்படும் வருமானத்தை ஒன்றிணைந்த நிதியத்தில் வரவுவைப்பதற்கான பொறிமுறையை அமைக்க முன்மொழிவு.
  • முப்படையினருக்கான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து அவதானம்


பத்து வருடங்கள் காலதாமதம் அடைந்துள்ள 1996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெடிபொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இராஜாங்க அமைச்சர் கெளரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில்  கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில், பாதுகாப்பு அமைச்சின் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அமைச்சின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

11996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க ஆயுதங்கள் (திருத்தச்) சட்டத்திலும், வெடிபொருட்கள் (திருத்தம்) சட்டத்திலும்  2012ஆம்  ஆண்டு திருத்தம் செய்ய முதலில்  குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அது தாமதமாகி வருவதாக இங்கு தெரியவந்தது. இதுவரை சுமார் 37,000 துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டத்திருத்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்தக் காலதாமதத்தினால் அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைக்க முடியாதிருப்பதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதால் சட்டத்தைத் திருத்தும் பணிகள் விரைவில் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

முப்படையினர் வெளித் தரப்பினருக்கு வழங்கிவரும் சேவைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் வரவுவைக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால்,  அது தொடர்பில் உரிய முறையொன்றைத் தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளபோதும் இன்னமும் இதனைச் செயற்படுத்தாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான வருமானம் நலன்புரிச் சங்கங்களுக்கே செல்வதாகவும், அவ்வாறு செய்வதில் முறையான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான தெளிவான கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் குழு அறிவுறுத்தியது. இந்த விடயத்தை விரிவாக ஆராயுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முப்படையினருக்கான உணவுப் பொருட்கள் கொள்முதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முப்படையினருக்கான உணவுக் கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் முகாமைத்துவ அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்னர் வழங்கப்பட்டிருந்தபோதும், கடற்படை மற்றும் விமானப்படையில் மாத்திரமே அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு தெரியவந்தது. அதன்படி, இராணுவத்திற்கான கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி அதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், செலவினங்களுக்கு ஏற்ப படையினர் உள்ளிட்ட தரப்பினர் பலன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்கும் 31 அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக 72 மில்லியன் குத்தகை ஒப்பந்தத்தில் 24 அலகுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வளவு வரித் தொகையில் வீடுகளைப் பெறுவதற்குப் பதிலாக, புதிய கட்டுமானம் செய்து தங்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்துக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நிர்மானப் பணிகள் எதிர்காலத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வுப் பொருள் களஞ்சியத்தில் 12 மில்லியன் ரூபா பொருட்கள் காணாமல்போனமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதுவரை இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரினதும் பணி இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், களஞ்சியத்துக்குப் பொறுப்பானவரிடமிருந்து குறித்த தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்படும்வரை உள்ளகக் கணக்காய்வின் போது இந்த விவகாரம் ஏன் வெளிப்படவில்லையென்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தவிர, மூலோபாய தொடர்பு வலையமைப்பு திட்டம், கொள்முதல் செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் கடமைகள் போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன, கௌரவ டயானா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, கௌரவ கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ ஜே.சி அலவத்வல, கௌரவ ஜயந்த கடகொட, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ வீரசுமண வீரசிங்க, கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ சஹான் பிரதீப் விதான ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom