இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கடன்களை அனுமதிப்பதற்காக அவர்களின் தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக மதிப்பீட்டு அறிக்கை வழங்குவதற்ககான ஏற்பாடுகளையும் செய்யவும் - இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்திற்கு (CRIB) பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை

திகதி : 2023-12-04

  • CRIB எனும் பதத்தை எதிர்காலத்தில் மாற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது - இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் குழுவில் தெரிவிப்பு

 

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் 2023.11.29 ஆம் திகதி கூடியது. இதன்போது குழு முன்னிலையில் இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) மற்றும் லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

தமது நிறுவனத்தின் பணிகள் குறித்து விளக்கமளித்த இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) அதிகாரிகள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது குறித்த மாத்திரமே தகவல்களை தமது நிறுவனம் வெளியிடுவதாகத் தெரிவித்தனர். நாட்டின் வங்கி மற்றும் நிதி முறைமையை ஒழுங்கான முறையில் பேணுவதற்கு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் ஆற்றி வரும் சேவைகளை தலைவர் பாராட்டினார். எவ்வாறாயினும், வங்குரோத்து நிலையை அடைந்த அல்லது கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வங்கிகள் கடன்களை அனுமதிப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தலைவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய தலைவர், கடன்களை அங்கீகரிக்கும் போது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக மதிப்பீடு உள்ளடங்கிய அறிக்கையை  (Rating Report) வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்திற்கு பரிந்துரை வழங்கினார். அதற்கு, சட்டத்தில் விரைவில் திருத்தங்களைக் கொண்டுவருமாறும் அதற்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு சட்டவாக்கசபை தயாராகவுள்ளதாகவும் தலைவர் வலியுறுத்தினார்.

குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கும் போது, பொதுமக்கள் மத்தியில் தமது நிறுவனம் (CRIB) தொடர்பில் சரியான புரிதல் இல்லை என சுட்டிக்காட்டினர். அதற்காக, இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். CRIB எனும் பதத்தை எதிர்காலத்தில் மாற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

இதேவேளை, லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் அதிகாரிகளும் தமது நிறுவனத்தின் பணிகள் தொடர்பில் குழுவில் தெரிவித்தனர். அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் கடன் வழங்கும் நிறுவனமாக அவர்களின் கடன் நிதியத்தை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் 10 இலட்சம் அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு கடன் திட்டத்தை அம்முப்படுத்துமாறும் தலைவர் அறிவுறுத்தினார். அந்த இலக்குகளை அடைவதற்கு இந்நிறுவனத்தின் சட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் குழுவின் தலைவர் மேலும் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ டபிள்யு.எம் தர்மசேன, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, குழுவின் தலைவரின் அனுமதியின் கீழ் கௌரவ பி.வை.ஜி. ரத்னசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom