இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தற்போதைய வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு அமைய குறியீட்டிற்கு ஏற்ப ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான சூத்திரங்களை உருவாக்கவும் – வழிவகைகள் பற்றிய குழு ஓய்வூதியத் திணைக்களத்துக்குப் பரிந்துரை

திகதி : 2023-11-30

  • ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணிக்கும்போது அதனை அறிவிப்பதற்கு டிஜிட்டல் கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழுவில் அவதானம்
  • உடல் ஊனமுற்ற மற்றும் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளை  அஸ்வெசும திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சமூக நலன் பெறவேண்டிய நபர்களின் பட்டியலில் (social registry) உள்ளடக்கவும்


ஓய்வூதியக் கொடுப்பனவை மனிதாபிமான ரீதியில் அணுகி தற்பொழுது காணப்படும் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின் விகிதத்துக்கு ஏற்ப உயர்த்துவதற்கு உரிய வகையில் ஏதாவது சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டும் என வழிவகைகள் பற்றிய குழு ஓய்வூதியத் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது. குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்றையதினம் (நவ. 29) கூடியபோதே இந்தப் பரிந்துரை வழங்கப்படடது.

ஓய்வூதியத் திணைக்களம், முதியோருக்கான தேசிய செயலகம் போன்ற அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டில் தற்பொழுது 7 இலட்சம் செயலில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் பதிவாகியிருப்பதாகவும், விசாரணை மட்டம் மற்றும் உயிரிழத்தல் போன்ற காரணங்களால் சிலருடைய ஓய்வூதியங்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்தது.

வருடமொன்றுக்கு 26,000 பேர் (19,000 சிவில் சேவை, 7000 முப்படை) ஓய்வூதியம் பெறுபவர்களாக இணைந்துகொள்வதாகவும், வருடமொன்றுக்கு 20,000 பேர் உயிரிழப்பதால் ஓய்வூதியப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. ஓய்வூதியத் திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 413 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும், 55 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வுபெறுபவர்களுக்கு சம்பளத்தைப் போன்று 24 மடங்கு பணிக்கொடையாக வழங்குவதாகவும், இதில் 10 வருடங்களுக்குள் ஓய்வூதியத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதேநேரம், 70 வயதுக்கு மேற்பட்ட, மாதாந்தம் 6000 ரூபாவுக்குக் குறைந்த வருமானத்தை ஈட்டுவோருக்கு மாதாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதே முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணி என இங்கு தெரிவிக்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர்களின் சான்றுரைப்படுத்தலுடன் இதுவரை 733,204 பேருக்கு முதியோருக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். முதியோர் உதவித்தொகை செலுத்துவோர் பட்டியலில் வருடாந்தம் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை, இறப்புக் காரணமாக குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவோரின் எண்ணிக்கை, மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளவிபரங்களைக் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும், முதியோருக்கான தேசிய செயலகத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

2016.01.01 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2020.01.01 வரையில் ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், 2020.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு சமமான அளவில் முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட்டமையால், 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 2020ற்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கிடையில் பாரிய சம்பள வேறுபாடு காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2020.01.01 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்குக் காரணம் என்றும், அத்துடன், பாடசாலை அதிபர்களுக்கு 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புக் காரணமாக 2017.01.01ற்கு முன்னர் ஒய்வுபெற்ற தரப்பினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவில் பாரிய முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

 அத்துடன், அரசாங்க ஊழியர்களுக்கு 2024/01/01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10,000 ரூபா வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவிருக்கும் நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா மாத்திரமே அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது 25 % அதிகரிப்பு மாத்திரமே என்றும், தற்போதைய வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு மத்தியில் அதிகரிப்பு போதுமானதாக இல்லை என ஓய்வூதியம் பெறுவோர் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். மனிதாபிமான முறையில் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு ஏற்ற விகிதத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கு சூத்திரங்களை உருவாக்குமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2016.01.01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும், அதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அந்த பலன்கள் கிடைக்கும் வகையில், மருத்துவமனைக் கொடுப்பனவுகள், அறுவைச் சிகிச்சைக் கொடுப்பனவுகள், இறப்பின் போதான கருணைத்தொகை என்பவற்றை வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தலைவர் ஆலோசனை வழங்கினார்.

ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஓய்வூதிய திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும், ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதற்கட்ட கலந்துரையாடலை டிசம்பர் 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்துமாறும் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், உடல் ஊனமுற்ற மற்றும் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளை  அஸ்வெசும திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சமூக நலன் பெறவேண்டிய நபர்களின் பட்டியலில் (social registry) உள்ளடக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஓய்வூதியம் வழங்குவதில் கணிசமான பாதிப்பு உள்ளதால், ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணமடைந்தால் அது குறித்து அறிவிப்பதற்கு டிஜிட்டல் முறைமையொன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ நாளக்க பண்டார கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom