2018, 2019 காலப் பகுதியில் 3100 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 50 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் கொள்வனவு செய்யும்போதே இயங்காத நிலையில் காணப்பட்டமை தொடர்பில் கோப் குழு அவதானம் |
திகதி : | 2022-06-15 |
2018, 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் 3100 மில்லியன் ரூபா செலவுசெய்து கொள்வனவு செய்யப்பட்ட 50 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் கொள்வனவு செய்யும்போதே இயங்காத நிலையில் காணப்பட்டமை தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனம் செலுத்தியது.
2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில் கூடிய கோப் குழு முன்னிலையில் இலங்கை மின்சார சபை அண்மையில் (10) ஆஜராகியிருந்தபோதே இந்தத் தகவல்கள் புலப்பட்டன.
இந்தக் கொள்வனவின் போது அதிகாரிகள் உரிய இயந்திரங்களைப் பரிசோதனை செய்திருப்பதாகவும், இந்தக் கொள்வனவுக்காக 3100 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டிருப்பதுடன், 50 மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் இன்றுவரை இயங்கும் நிலையில் இருப்பதாகவும் இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இயந்திரங்கள் ஆரம்பகாலத்தில் செயற்படும் நிலையில் இருக்கவில்லையென்றும், புனரமைக்கப்பட்ட பின்னரே இயங்கும் நிலைக்குச் சென்றதாகவும் கோப் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும் அவை இயங்காத நிலையில் காணப்பட்டமை குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இவ்விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
அத்துடன், LTL நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் உள்ள உரிமை, இந்த நிறுவனத்தைக் கணக்காய்வு செய்வது யார் என்பதைத் தீர்மானிக்கும் போது அரசாங்கக் கணக்காய்வை நீக்குவதற்கான அதிகாரம் இலங்கை மின்சார சபைக்கு உள்ளதா என கோப் குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். இந்நிறுவனத்தின் பங்குகளில் 63 வீதமான பங்குகள் இலங்கை மின்சாரசபையிடம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைய அதிக பங்குகளை இலங்கை மின்சாரசபை கொண்டிருந்தாலும் தொழில்நுட்ப விடயங்களைக் காரணங்காட்டி அரசாங்கக் கணக்காய்விலிருந்து குறித்த நிறுவனம் நீக்கப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். எனவே, இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பதில் வழங்கினார்.
அத்துடன், எம்பிலிப்பிட்டிய எஸ் பவர் மின்னிலையத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய புதிய ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டமை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். அத்துடன், மின்சாரக் கொள்வனவு தொடர்பில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்போது விலைகளைத் தீர்மானிப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் நடைமுறை குறித்து குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். இது பற்றி மின்சாரசபையின் அதிகாரிகளிடமிருந்த உரிய பதில் வழங்கப்படவில்லையென்பதுடன், ஒரு மாதகாலத்துக்குள் இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
அதேநேரம், நீண்டகால மின்பிறப்பாக்கத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், 2022-2041 வருடங்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மின்பிறப்பாக்கத் திட்டம் தொடர்பான தகவல்கள் கணக்காய்வாளர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. 2018-2037ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான திட்டம் குறித்த தகவல்களே காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கமைய அனுமதி வழங்கப்பட்டுள்ள நீண்டகால மின்பிறப்பாக்கத் திட்டம் குறித்த தகவல்களை விரைவில் கணக்காய்வாளர் திணைக்களத்துக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடைவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் கொள்கைகளின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 50 வீதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்பட்டதாகவும், ஆனால் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தேவை 70% ஆகக் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
அரசியல் அதிகார மாற்றத்தின் அடிப்படையில் கொள்கைள் மாற்றமடைந்தாலும் மின்பிறப்பாக்கம் குறித்த திட்டத்தை மாற்றமடையாது பேணவேண்டியது அவசியம் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனைவிடவும் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் அதற்கான சாத்தியக் கூற்று அறிக்கைகள் குறித்தும், அவசர மின்சாரக் கொள்வனவு, வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் வைப்புக்கான வட்டி குறித்த பல விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ சாகர காரியவசம், கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ டி.வி.சானக, கௌரவ நளின் பண்டார, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த, கௌரவ மதுர விதானகே, கௌரவ எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர். மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










