இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கடந்த காலங்களில் கோப் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் கோப் தலைவரிடமிருந்து விசேட அறிக்கை

திகதி : 2022-06-10

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப் குழு) அண்மைக் காலங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில்  அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் அண்மையில் (07) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் கோப் குழுவினால் இலங்கை மத்திய வங்கி வங்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இலங்கை மத்திய வங்கியின் அப்போதைய நாணயச் சபையின் உறுப்பினராகவிருந்த சமந்த குமரசிங்கவின் பெயரை ராணி ஜயமஹா அவர்கள் வெளியிட்டபோது ஏற்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து குமாரசிங்க அனுப்பியுள்ள பதில்களும் கோப் குழுவின் தலைவரினால் இங்கு சமர்ப்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி சமந்த குமாரசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட அவதானிப்பு அடங்கிய கடிதம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் கூறினார்.

மக்கள் வங்கி தொடர்பில் கோப் குழு நடத்திய விசாரணையின் போது நவலோக குரூப் ஒவ் நிறுவனத்தினால் கடன்கள் மீளச் செலுத்தப்படாமை தொடர்பில் கூறப்பட்டமை குறித்து அந்நிறுவனத்தினால் 2022 மே 30ஆம் திகதி கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், நவலோக குழுமத்தின் கீழ் உள்ள 12 நிறுவனங்கள் மேலே குறிப்பிடப்பட்ட கடன்களை மீளச் செலுத்தாமை குறித்த விடயத்துடன் தொடர்புபடவில்லையென்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கடிதத்தையும் அவர் குழு முன்னிலையில் சமர்ப்பித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு கடந்த வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, மருந்துகளின் இருப்புக்களை முகாமைத்துவம் செய்யும் கணினிக் கட்டமைப்புத் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் அப்போது அமைச்சின் செயலாளராகவிருந்த கலாநிதி ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட செலவீனம் தொடர்பான விடயங்களே அடிப்படையாகக் கொள்ளப்பட்டதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் கோப் குழுவின் விசாரணைகள் தவறுகள் நிறைந்தவை என்று தனியார் துறையான ஈவிஸ் இன்போர்மேஷன் சிஸ்டம்ஸ் லிமிடட் என்ற நிறுவனத்தினால் ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், தமது நிலைப்பாட்டை 2022 ஜூன் 03ஆம் திகதி கோப் குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர். ஈவிஸ் இன்போர்மேஷன் சிஸ்டம்ஸ் லிமிடட் நிறுவனத்தின் தகவல்களின் படி மேற்குறிப்பிட்ட கட்டமைப்புக்காக 23,120,458.73 மில்லியன் ரூபாவே பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார இராஜாங்க அமைச்சினால் கோப் குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ள அறிக்கையின் படி, ஈவிஸ் இன்போர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு 458,591,910.6  மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஈவிஸ் சொலியுஷன்ஸ் பிரைவட் லிமிடட் நிறுவனத்திற்கு 66,176,348.98 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்மைய மொத்தமாக 524,768259.4  மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவர் இந்த இரண்டு அறிக்கைகளையும் சபையில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசேட விசாரணையை நடத்துவதற்கு கணக்காய்வாளர் நாயகத்துக்குப் பரிந்துரைத்ததுடன், இந்த அறிக்கை ஒரு மாத காலத்துக்குள் கிடைத்த பின்னர் முழுமையான அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த கூட்டத்தில் எழுந்த கணினிக் கட்டமைப்புப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இந்நாட்டில் தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற இளைஞர்களிடம் விடுத்த அழைப்பிற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கும் கோப் தலைவர் நன்றி தெரிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom