இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையின் கனியவளங்கள் தொடர்பான தேசிய கொள்கையை வகுப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் கோப் குழு அவதானம்

திகதி : 2022-04-25

இலங்கையின் கனியவளங்கள் தொடர்பான தேசிய கொள்கையைத் வகுப்பதில் காலதாமதம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனம் செலுத்தியது.

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் 2018-2019 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் குறித்த பணியகத்தின் தற்போதைய செயற்திறன் தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தலைமையில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக புவிச் சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததுடன், அன்றையதினம் இதன் முழுமையான அறிக்கை குறித்து ஆராய்வதற்குப் போதிய நேரம் கிடைக்காமையால் இப்பணியகம் மீண்டும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டது.

கனியவளங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான அனுமதி 2017ஆம் ஆண்டு அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளபோதும், இதுவரை தேசிய கொள்கை தயாரிக்கப்படாமை கவலைக்குரியது என கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் சுட்டிக்காட்டினார். இதற்கமைய கால அட்டவணையொன்றை அமைத்து ஆறு மாத காலத்துக்குள் தேசிய கொள்கையைத் தயாரிக்க முடியுமா என கோக் குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். ஐந்து மாதங்களுக்குள் இதனைத் தயாரிக்க முடியும் என இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர், கனியவளங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றைத் தயாரித்திருந்தால் நாட்டில் அந்நியச் செலாவணிப் பிரச்சினை காணப்படும் சூழலில் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும் என்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் கனிய வளங்கள் குறித்த வரைபடமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

வெள்ளவாய கொட்டிகம்பொக்க பிரதேசத்தில் வன பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப்பகுதி மற்றும் இதனுடன் இணைந்ததாகக் காணப்படும் தனியார் காணியில் அகழ்வுகளை மேற்கொண்டு பெறப்பட்ட 22094 கியூப் திருவானை கற்கள் தொடர்பில் உரிமைத் தொகை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களிடமிருந்து அறவிடப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவற்றுக்கான உரிமைத் தொகையை சுரங்க உரிமம் வைத்திருப்பவர்களிடம் அன்றி ஏற்றுமதி உரிமம் வைத்திருப்பவர்களிடமிருந்தே வசூலிப்பதாக வருகைதந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் சிபாரிசு செய்தார்.

யான் ஓய நீர்த்தேக்கத் திட்ட கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மணல்களுக்காக அறவிடப்பட வேண்டிய 27,419,690 ரூபா உரிமைத் தொகை ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து அறவிடப்படாமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், 2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு, பாதி ஊதியம், தொழில்சார் கொடுப்பனவுகள், ஊக்கத்தொகைகள் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் போனஸ் என்பன வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள் ஒழுக்காற்று விசாரணை உத்தரவின்றி பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் 2019 ஓகஸ்ட் முதல் சேவையில் இருந்தனர். இதற்கான பணத்தை மீண்டும் அறவிட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குழுவுக்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் முறையான விசாரணையை நடத்துமாறு அமைச்சின் செயாளருக்கு, கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

2011 முதல் 2014 வரையிலான ஆண்டுகளுக்கு கள ஆய்வு வருவாய் சேகரிப்பில் வாடிக்கையாளர்களிடம் பெறுமதி சேர் வரி விதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், மீளாய்வாண்டில் உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு 93,068,185 ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் இது பணியகத்திற்கு ஏற்பட்ட நட்டமாக இனங்காணப்பட்டது. எனவே இதற்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இக்குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்த அமரவீர, கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ ஜகத் புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom