இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளினால் காலத்துக்குக் காலம் எடுக்கப்படும் தீர்மானங்களால் அரச நிதிக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன - கோப் தலைவர் சுட்டிக்காட்டு

திகதி : 2022-03-11

அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சேவையாற்றும் அதிகாரிகளால் காலத்துக்குக் காலம் எடுக்கப்படும் தீர்மானங்களால் அரச நிதிக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுவதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் வகையில் கோப் குழு பாராளுமன்றத்தில் நேற்று (10) கூடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அபிவிருத்தி லொத்தர் சீட்டிழுப்பு நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் நோக்கில் 38.75 மில்லியன் ரூபாய் செலவு செய்து நிர்மாணிக்கப்பட்ட கலையகத்தை உரிய நோக்கத்திற்காக 2015 முதல் இதுவரை பயன்படுத்தாமை தொடர்பில் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், இதே நோக்கத்திற்காக அவ்வாறான நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு குறித்த காலப்பகுதியில் 2146.82 மில்லியன் ரூபா பணம் செலுத்தியமை தொடர்பிலும் குழு வினவியது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் மானிய விலையில் ஒளிப்பதிவு செய்வதால் இந்தக் கலையகம் தேவையில்லை எனவும், அதனை கேட்போர் கூடமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

இதன்போது கோப் குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கும் போது, வெவ்வேறு தலைவர்கள் மற்றும் பணிப்பாளார் சபைகளின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதால் பாரிய நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான திட்டங்கள் முறையாக உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் முறையான அறிக்கையொன்றை அமைச்சின் செயலாளர் ஊடாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக வொக்க்ஷோல் வீதியில் இலக்கம் 234 எனும் கட்டடத்தை வாடகை அடிப்படையில் சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஒருதலைப்பட்சமாக மீறியதால் சபைக்குக் கிடைக்கவேண்டிய  5,700,000 ரூபாய் நிதியை 14 ஆண்டுகளாக அறிவிட முடியாமல் இருப்பது தொடர்பிலும் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபை வர்த்தக அமைச்சின் கீழ் இருந்த போது மேற்படி கட்டடம் வர்த்தக அமைச்சினால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், தமது சபைக்கு கட்டடம் தேவைப்படுவதால் மேற்படி கட்டடத்தை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சு அறிவித்ததாக சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அமைச்சின் இடைக்கால குத்தகையின் கீழ் இந்தக் கட்டடத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபையினால் இந்தக் கட்டடத்தை பயன்படுத்தும் போது மேலதிக நிதி செலவிடப்படுவதால் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததாகவும், கட்டடத்துக்கான அடிப்படை கட்டணம் வர்த்தக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு புலப்பட்டது. அதற்கமைய உரிய நிதியை பெற்றுக்கொள்வைத்து தொடர்பில் அமைச்சின் செயலாளரின் அவதானிப்புக்களை கோரியுள்ளதாகவும் இதற்காக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

2015 மே மதம் 25 ஆம் திகதி இலக்கம் பி.ஈ.டி/01/2015 எனும் அரசாங்க முயற்சியாண்மை சுற்றுநிருபத்துக்கு அமைய தகைமைகளை பூர்த்தி செய்யாத போக்குவரத்து உரிமை அற்ற அதிகாரிகள் 08 பேருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கியமை மற்றும் எரிபொருள் மணியத்துக்காக 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் 2,590,545 ரூபா நிதி வழங்கியமை தொடர்பில் கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபை ஜனாதிபதி செயலகத்தின் கீழ்இருந்த போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் வாகனங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வாறான வாகனங்களை வழங்குவதை நிறுத்துமாறு அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி உரிய அனைத்து ஆவணங்களுடன் அறிக்கையொன்றை குழுவிற்கு அனுப்புமாறு கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

2008 ஆம் ஆண்டில் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 8,095,000 ரூபா பெறுமதியான கெப் வாகனமொன்றை சபையின் தலைவரால் பெற்று அதனை சபையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அன்று முதல் அந்த வாகனம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கோப் குழு நீண்ட நேரம் வினவியது.

அந்த வாகனத்துக்காக முகவர் நிறுவனத்துக்கு கொடுப்பனவு செய்யாமை காரணமாக அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் அபிவிருத்தி லொத்தர் சபையினால் அந்நிறுவனத்துக்கு சுமார் 16,190,000 ரூபா செலுத்தவேண்டி ஏற்பட்டது. இந்த வழக்குக்காக சபையினால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்தரணிகள் கொடுப்பனவு உள்ளிட்ட 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான முழு நட்டம் 26,634,185 ரூபாவாகும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இந்தக் நட்டத்தை அறவிடுவதற்கு சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இதன்போது சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான கௌரவ சரத் வீரசேகர, கௌரவ மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் நாளக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுசில் பிரேமஜயந்த, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ சம்பிக்க ரணவக்க, கௌரவ ஹர்ஷ டி சில்வா, கௌரவ ஈரான் விக்ரமரத்ன, கௌரவ மதுர விதானகே, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1

2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom