தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன |
திகதி : | 2022-02-11 |
எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலைக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார். நேற்றையதினம் (10) நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டளவில் மொத்த தேயிலை உற்பத்தி 21 மில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். இரசாயன உரத் தட்டுப்பாட்டினால் மாத்தறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமண வீரசிங்ஹ குறிப்பிட்டார். இரசாயன உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையை அரசாங்கம் ஒழுங்குமுறைப்படுத்துவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வீரசுமண வீரசிங்க, தேயிலை பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இரசாயன உரங்களில் சில ஏனைய பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக் கூறினார். சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கூட்டுறவு முகாமைத்துவ திட்டத்தின் ஊடாக தேயிலை தோட்டங்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான செலவில் 50 வீதத்தை அரசாங்கம் வழங்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் கேட்டறிந்தார். இது தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள பிரச்சினை என்பதால் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துள்ள போதிலும், தம்மைப் பொறுத்தவரை, இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு கூட்டொப்பந்தம் வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமாரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்காக எந்தவொரு முறைகேடுகளையும் தடுப்பதற்கு தமது அமைச்சு முடிந்தளவு முயற்சியை எடுக்கும் என்றும், அத்துமீறி நடந்துகொள்ளும் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் தென்னங்கன்று நாற்றுக்களை உருவாக்கும் திட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அவர்கள் முன்வைத்த முன்மொழிவின் பேரில் தேங்காய் எண்ணெய் அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் துருவல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாத்தறை நில்வலா பிரதேசத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் நெல் வயல்களில் தென்னை உற்பத்தியை துரிதப்படுத்தும் திட்டம் போன்ற யோசனைகளுக்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, சிவஞானம் சிறிதரன், பழனி திகம்பரன், எம். ராமேஸ்வரன், சம்பத் அத்துகோரல, வீரசுமண வீரசிங்க, அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









