தேயிலைக்கான உர மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ |
திகதி : | 2021-11-23 |
தேயிலை கைத்தொழில் தற்பொழுது நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், தேயிலைக்கான உர மானிய முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ, பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரனவிடம் கோரிக்கைவிடுத்தார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையைில் நேற்று (22) நடைபெற்ற பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உரத் தட்டுப்பாடு காரணமாக சிறு தேயிலை விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த கௌரவ அமைச்சர் இந்த மானியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இலங்கையில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியதாகவும், அந்த ஆண்டில் தேயிலை உர இறக்குமதி குறைந்த மட்டத்தில் இருந்ததாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார். எனினும், 2020 ஆம் ஆண்டில் அதிக அளவு தேயிலை உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தபோதும் ஒப்பீட்டளவில் விளைச்சல் அதிகரிக்கவில்லை. உலக சந்தையில் உரத்தின் விலை ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கறுவா, மிளகு போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்களின் விலைகள் 2020ஆம் ஆண்டளவில் கணிசமான அளவு அதிகரித்தபோதும், தேயிலையின் விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது முக்கியமான விடயமென்றும், இது தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் இதற்குப் பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள நில்வளா திட்டத்தின் காரணமாக 15000 ஏக்கர் வயல்நிலங்கள் தரிசு நிலங்களமாக மாறியிருப்பதாகவும், இந்தப் பகுதிகளில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வது குறித்துக் கவனம் செலுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ, அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தார். இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பதில் வழங்கினார்.
பாரிய தோட்டங்களுக்கு சொட்டு நீர்ப்பாசன முறைக்கு மாற்றீடான முறையொன்றை அறிமுகப்படுத்துவது, குருநாகல் மாவட்டத்தில் காணப்படும் தென்னை நார் கைத்தொழில் மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் உள்ள செம்புவத்தை பிரதேசத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துதல் போன்ற விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பர்னாந்து, ஜனக வக்கும்புர, கனக ஹேரத், வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்ஹ, அசங்க நவரத்ன, கலாநிதி சரித ஹேரத், வேலு குமார், குணபால ரத்னசேகர, குணதில ராஜபக்ஷ, மஞ்சுளா திசாநாயக, உதயன கிரிந்திகொட, அமரகீர்த்தி அதுகோரல ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











