இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கொவிட்-19 சூழ்நிலை காரணமாக அரசாங்கம் இவ்வருடத்தில் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழந்துள்ளது – கோபா குழுவில் தெரியவந்தது

திகதி : 2021-10-26

நாட்டில் நிலவும் கொவிட்  சூழல் காரணமாக இவ்வருடத்தில் அரசாங்கம் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி அண்மையில் (22) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவித்தார்.

மதுவரித் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 160 பில்லியன் ரூபாவாக இருக்கின்றபோதும், இந்த இலக்கை எட்டுவது சிரமாக இருக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

மதுவரித் திணைக்களம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கை மற்றும் அத்திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து பார்க்கும் நோக்கில் கடந்த 22ஆம் திகதி கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அக்குழு கூடியபோதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் கணினிக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா குழுவில் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தபோதும், இது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், திணைக்களத்தில் மதுவரி வருவாயைக் கணக்கிடும் முறையைச் சரிசெய்வதற்கான கணினி மென்பொருள் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியதுடன், 2016 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான வரவுசெலவுத்திட்டங்கள் மற்றும் குறைநிரப்பிகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய திணைக்களத்துக்குச் சொந்தமான சகல நிறுனங்களையும் உள்ளடக்கியதாக விரைவில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.

இதுவரை கணினி கட்டமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குழுவில் தெரிவித்தார். இந்தக் கணினிக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையுடன் கூடிய திட்டமொன்றை நவம்பர் 05ஆம் திகதிக்கு முன்னர் விரைவில் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்கு இங்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மதுப் போத்தல்கள் மற்றும் மதுப்போத்தலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு பாதுகாப்பான ஸ்டிக்கர்களை வழங்குவது மற்றும் பாதுகாப்பான ஸ்டிக்கர் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் காலதமாதமடைவது குறித்தும் இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பிரதான உற்பத்தி நிறுவனங்களால் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபோதும் தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக இந்தச் செயற்பாடு காலதாமதம் அடைந்திருப்பதாகவும் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் இச்செயற்பாட்டை துரிதப்படுத்துமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிடுகையில், அரசாங்கத்திற்கு மூன்றாவது அதிகூடிய வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் மதுவரித் திணைக்களத்துக்குச் சேரவேண்டிய உரிய வருமானத்தை ஈட்டிக்கொள்வதாயின் குறித்த திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு முன்னர் கோபா குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, வைத்திய கலாநிதி சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, பிரசன்ன ரணவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தனாயக, அஷோக் அபேசிங்க, வைத்தியகலாநிதி உபுல் கலப்பதி, வீரசுமன வீரசிங்ஹ, பைசல் காசிம் மற்றும் பி.வை.ஜி.ரத்ணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதவிரவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom