ரிதியாகம பண்ணை 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு காலப் பகுதியில் 173 மில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கியிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் புலப்பட்டது |
திகதி : | 2021-04-08 |
2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பசுமாடுகளை பராமரிக்கும் ரிதியாகம பண்ணை 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் 173 மில்லியன் ரூபா நஷ்டம் அடையும் நிலைக்குச் சென்றிருப்பதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 2018 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை பசுமாடுகளுக்காக 508,793,160 ரூபா செலவில் உணவு கொள்வனவு செய்யும்போது கொள்முதல் குழுவின் அனுமதிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறித்தும் இங்கு தகவல்கள் வெளியாகின.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் நிதிச் செயற்பாடுகள் ஒழுங்கீனமான முறையில் காணப்படுவதாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியின் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் செயற்பாடுகளை நீதிக் கட்டமைப்பின் கீழ் உரிய வழிகாட்டல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு வலியுறுத்தியது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கான கணக்காய்வு நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்றிறனை ஆராயும் நோக்கில் கூட்டப்பட்ட கோப் குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரட்ன, பிரேம்நாத் சீ.தொலவத்த, எஸ்.இராசமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான வருடாந்த நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறு வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லையென்றும், இவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.செனரத்துக்குப் பணிப்புரைவிடுத்தது.
நீண்டகாலமாக 166 பதவிகளுக்கு வெற்றிடம் காணப்படுவது பிரச்சினைக்குரியது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது. நிறைவேற்றுப் பதவிகள் கடந்த சில வருடங்களாக வெற்றிடங்களாகக் காணப்படுவது குறித்தும் குழு அதிருப்தியை வெளிப்படுத்தியது. சபைக்கென தனியான சட்ட அதிகாரி ஒருவர் இல்லையென்றும், இதற்கான புதிய பதவிநிலையொன்றை உருவாக்கி ஒருவரை உள்வாங்குமாறும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
1974 மற்றும் 1992 ஆகிய வருடங்களிலிருந்து சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் 24 பண்ணைகளுக்கு சொந்தமான காணிகளுக்கு உரிமைகள் உரிய முறையில் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் 194,565,192 ரூபா பெறுமதியான கட்டடங்கள் மற்றும் 701,358,733 ரூபா பெறுமதியான கட்டமைப்புக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை, வரையறுக்கப்பட்ட மகாவலி கால்நடை நிறுவனம், வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி முகாமைத்துவ அபிவிருத்தி (தனியார்) நிறுவனம் போன்ற மூன்று நிறுவனங்கள் 12,617.43 ஹெக்டெயர் நிலப்பரப்பைக் கொண்டிருப்பதும் என்றும் இங்கு தெரியவந்தது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையிடம் ஒரேநேரத்தில் 3.75 தொன் மாட்டுத் தீவணத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரம் காணப்படுகின்றபோதும் இது பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறக்குமதி செய்யப்படட பசுக்கள் காணப்படும் மெனிக்பள்ளம, டயகம மற்றும் ரிதியகம போன்ற பண்ணைகளில் ஆகக்குறைந்தது நேரடி செலவுகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதும் இங்கு புலப்பட்டது.
சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வெலார்ட் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கினார்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளின் சில கணக்குகளில் உள்ள முரண்பாடுகளையும் குழு சுட்டிக்காட்டியதுடன், அவற்றை மறு ஆய்வு செய்யுமாறும் வலியுறுத்தியது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








