இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீண்டகால நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக பல பில்லியன் ரூபா பெறுமதியான வரி நிலுவையாகவுள்ளது – கோபா குழுவில் புலப்பட்டது

திகதி : 2021-03-15

நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பது தொடர்பான நீண்டகால நீதிமன்ற செயற்பாடு மற்றும் வழக்குகள் காலம் தாழ்த்தப்படுவதால் பல வருடங்களுக்கான பல பில்லியன் ரூபா பெறுமதியான வரியை அறவிடமுடியாதிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.சீ.பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இறைவரித் திணைக்களம் அண்மையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இந்தத் தகவலை முன்வைத்தார். வரி ஏய்ப்பு செய்பவர்கள் தமது நிலுவை வரியைச் செலுத்தாதிருப்பதற்கு நீதித்துறை செயற்பாட்டின் காலதாமதங்களை சாதகமாகப் பயன்படுத்தப்படுவதும் இங்கு புலப்பட்டது.

இதுபோன்ற தாமதங்களைத் தடுத்து, நிலுவை வரி குறித்த வழக்கு செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய கோபா குழு, இது தொடர்பில் நீதி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை விரைவில் கலந்துரையாடலொன்றுக்கு அழைக்கவிருப்பதாகவும் தெரிவித்தது.  

அத்துடன், வரி வசூலிக்கும் நடைமுறையை மேலும் நெறிமுறைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவை ஏற்படின் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

வரிசெலுத்த வேண்டியோரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவை வரி மற்றும் தண்டப்பணம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் 2021 ஜனவரி 06ஆம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடலில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரி செலுத்தாது முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் அவை செலுத்த வேண்டிய தொகை தொடர்பில் இறைவரித் திணைக்களம் 2021 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் முன்வைத்த பட்டியல் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

2015 டிசம்பர் 31ஆம் திகதி வரையான வரிக் காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட கோப்புக்கள் Legacy கணினி கட்டமைப்பின் கீழும், 2016ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதலிருந்தான கோப்புக்கள் RAMIS  கணினி கட்டமைப்பின் கீழும் நிர்வகிக்கப்படுவதாகவும், வசூலிக்கப்பட வேண்டியிருப்பதாகக் காண்பிக்கும் வரிப் பெறுமதி உண்மையில் அறவிடப்பட வேண்டிய வரித் தொகை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, வரி நிலுவையைச் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் குறித்த துல்லியத்தன்மையில் பிரச்சினை காணப்படுவதால், இது சீர் செய்யப்பட வேண்டும் என்றும் குழு, இறைவரித் திணைக்களத்தை வலியுறுத்தியது.

இந்த நிலையில், அதிகப்படியான வரி நிலுவையைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அவை செலுத்தவேண்டிய வரித் தொகை ஆகியன உள்ளடக்கிய விபரங்களைக் கொண்ட அறிக்கையொன்றை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் இக்குழு பரிந்துரைத்தது.

அத்துடன், Legacy கணினிக் கட்டமைப்புக்கு அமைய அறவிடப்பட வேண்டியுள்ள  வரி நிலுவையின் பெறுமதி 107 பில்லியன் ரூபா என்பதுடன் இதில் 224 பில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளன. எஞ்சிய வரி நிலுவை மற்றும் தண்டப்பணத் தொகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியது.

வரி அறவிடும் செயற்பாட்டில் மோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் காணிப் பதிவுத் திணைக்களம் உள்ளிட நிறுவனங்களை, இறைவரித் திணைக்களத்துடன் தொடர்புபடுத்துவதன் அவசியம் குறித்து கோபா குழு சுட்டிக்காட்டியது. இதுவரை இவ்வாறு இணைக்கப்பட வேண்டிய 29 நிறுவனங்கள் இருப்பதாகவும், இது தொடர்பில் காணப்படும் சட்டச் சிக்கல்களை நீக்கி இதனை முன்னெடுப்பது குறித்து ஆராய இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மீண்டும் ஒருமுறை அழைக்கவிருப்பதாக கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ எஸ்.சிறிதரன், வைத்தியகலாநிதி கௌரவ உபுல் கலப்பதி, கௌரவ.பி.வை.ஜீ.ரத்னசேகர, கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

1

2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom