இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2020ஆம் ஆண்டில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமித்துள்ளது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

திகதி : 2021-01-20

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2020ஆம் ஆண்டில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமித்திருப்பதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்ஹ நேற்று (19) கோப் குழுவில் தெரிவித்தார்.

இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து  ஆராய்வதற்கு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நேற்று (19) கோப் குழு கூடியபோதே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தத் தகவலை முன்வைத்தார்.

விசேடமாக கடந்த வருடத்தில் மசகு எண்ணெய் பரல் ஒன்றின் விலை வீழ்ச்சியடைந்தமை மற்றும் வேறு சில காரணங்களால் இதன் நன்மைகளை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் அரசாங்கத்துக்குக் கிடைத்த இலாபம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கோப் குழுவில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, மஹிந்த அமரவீர, இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திஸாநாயக்க, நளின் பண்டார, இரான் விக்ரமரட்ன, பிரேம்நாத் சி.தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் பார்வையாளர் உறுப்பினராக இசுறு தொடங்கொட ஆகியோரும் கோப் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அதேநேரம், துறைமுகத்திலிருந்து கொலன்னாவைக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் குளாய் கட்டமைப்புத் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதனைப் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் குளாய் கட்டமைப்பு அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்காக வேறு இடத்தில் புதிய வீடுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். விசேடமாக இதில் சம்பந்தப்படும் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதன் அவசியம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தினார்.

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள எரிபொருள் தாங்கிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்தின் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது.

அத்துடன், முன்னைய இருப்புக்களைவிட மேலதிகமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை விஸ்தரிக்கும் நோக்கில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவல முனையங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் சாத்தியக்கூற்று ஆய்வொன்றை நடத்தி அதுபற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

அதேநேரம், புகையிரதத்தின் மூலம் எரிபொருள்களை விநியோகம் செய்வது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதுவரை புகையிரதம் மூலம் 30 வீதமான எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் இதனை 42 வீதமாக அதிகரிக்கவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அதிகரிப்பு தொடர்பில் கோப் குழு பாராட்டுக்களைத் தெரிவித்தது.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom