இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நாட்டில் நீர் விநியோக செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அடுத்த வருடம் 264 திட்டங்கள்

திகதி : 2020-11-28

நாட்டில் நீர் விநியோகத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வருடங்களில் 264 திட்டங்கள் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக நீர் வழங்கல் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்களில் ஒரு தொகுதி 2021ஆம் ஆண்டும், எஞ்சிய தொகுதி 2022ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயகார தலைமையில் நேற்று (27) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கருத்துத் தெரிவித்த அந்த அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தற்பொழுது 40 வீதமாகக் காணப்படும் நீர் விநியோகத்தை இத்திட்டங்களின் மூலம் 78 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

இதற்கமைய தற்பொழுது நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 2.07 கனஅடி நீரை 4.47 கனஅடியாக உயர்த்த முடியும். இந்த சகல திட்டங்களும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டு, உள்ளூர் நிதியைப்பயன்படுத்தி உள்ளூர் ஒப்பந்தகாரர்களினால் இதற்கான பணிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீரை வழங்குவது மாத்திரம் தமது நோக்கம் இல்லையென்றும், மக்களுக்கு தரமான நீரை வழங்குதே தாம் எதிர்பார்க்கும் நோக்கம் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். தமது அமைச்சின் கீழ் நீர் வளங்கள் சபை,  நீர் வழங்கல் சபை மற்றும் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் என்பன இதற்காக செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கிராமிய மற்றும் பிரதேச நீர்க் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, தேசிய சமூக நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் சபையின் கீ்ழ் வராத பகுதிகள் மற்றும் விசேட தேவையுடைய பகுதிகளில் நீரை விநியோகிப்பதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றார். அத்துடன், தமது அமைச்சின் கீழ் உள்ள சமூக நீர் வழங்கல் திணைக்களமானது பதிவு செய்யப்பட்ட 4500 சமூக நீர் அமைப்புக்களின் ஊடாக ஏற்கனவே 7 இலட்சம் பேருக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கிறது. நாட்டில் 100 வீத நீர் விநியோகத்தை வழங்குவதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எதிர்பார்ப்பு என்பதால் இதனை அடைவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, சம்பத் அதுகோரல, ரஜிகா விக்ரமசிங்ஹ, முதிதா பிரசாந்தி, மிலான் ஜயதிக, வீரசுமன வீரசிங்ஹ, டீ.எஸ்.ஹேரத், சுதத் மஞ்சுல, ரோஹன திஸாநாயக்க, காதர் மஸ்தான், வசந்த யாப்பாபண்டார, அஜித் ராஜபக்ஷ, ஜயரத்ன ஹேரத், குணதிலக ராஜபக்ஷ, அசங்க நவரட்ன, கீதா குமாரசிங்ஹ, சமன்பிரிய ஹேரத், கே.பி.எஸ்.குமாரசிறி, அமரகீர்த்தி அதுகோரல, சிறிபால கம்லத், இசுறு தொடங்கொட ஆகியோரும், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, கிராமிய மற்றும் பிரதேச நீர்க் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.பி.விஜயபந்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 

1

2 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom