PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

படைக்கலச் சேவிதரின் அலுவலகம

படைக்கலச் சேவிதரின் அலுவலகம் பாராளுமன்றத்தின் மிக முக்கியமானதொரு அலுவலகமாகும். இதன் ஆரம்பம் பிரித்தானியப் பாராளுமன்ற வரலாற்றில் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்றதன் பின்னர், இலங்கை, வெஸ்ட் மினிஸ்டர் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரித்தானியப் பாராளுமன்ற முறைமையைச் சுவீகரித்துக் கொண்டது. இதன் பின்னரே, படைக்கலச் சேவிதரின் அலுவலகம், அதன் தனிப்பட்ட தொழிற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் இரண்டாவது முக்கியத்துவம் பெற்ற அலுவலகம் என்ற இடத்தையும் பெற்றுக் கொண்டது. முக்கியத்துவத்தில் முதன்மை இடம் வகிப்பது பாராளுமன்றச் செயலாளர் நாயத்தின் அலுவலகமாகும்.

படைக்கலச் சேவிதர், பாராளுமன்றச் செயலாளர் நாயத்தினால் பணியில் அமர்த்தப்படுகிறார். அவருடைய பணிகளைச் செய்யும் வேளையில் அவர், சபா மண்டபத்தின் பிரதான வாயிலை அடுத்து இருக்கும் ஒரு விசேட இடத்தில் இருப்பார். வைபவங்கள் தொடர்பான பணிகள், ஒழுங்கு முறைகளைப் பேணுதல், செங்கோலைப் பாதுகாத்தல், பாதுகாப்பு, வெளியாள்களுக்கான அநுமதி, பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு செய்தல், பார்வையாளர் கூடங்களை மேற்பார்வை செய்தல் என்பன இவரது பணிகளுள் சிலவாகும்.

 

வைபவ ரீதியான தொழிற்பாடுகள்

பாராளுமன்ற வைபவங்களின் தலைவர் படைக்கலச் சேவிதராவார். இவ்வகையான வைபவங்களை ஏற்பாடு செய்வது இவரின் பொறுப்பாகும். ஒரு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது பாராளுமன்றத்தின் வைபவ ரீதியான ஆரம்பம் முக்கியமானதொரு வைபவமாகக் கருதப்படுகிறது. அத்துடன் பிற நாட்டுத் தலைவர்களை வரவேற்பதும் மற்றுமொரு மிக முக்கியமான நிகழ்வாகும். இதுவரை இலங்கைப் பாராளுமன்றத்தில், இவ்வகையான ஏழு தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

அரச மரியாதையுடனான இறுதி ஊர்வல நிகழ்வுகளும் படைக்கலச் சேவிதரினால் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்படும்

தன்னுடைய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு, படைக்கலச் சேவிதர்,ஏனைய பாராளுமன்றச் செயலாளர் நாயத்தின் ஊழியர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

ஒழுக்கமும் ஒழுங்கு முறைகளைப் பேணலும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒழுக்கத்தையும், ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்பதையும் பேணும் பொறுப்பு, சபா நாயகரின் வழிகாட்டலின் கீழ், படைக்கலச் சேவிதரையே சாரும். தவிசின் அதிகாரங்களுக்கு மதிப்பளிக்காமல், மரியாதையின்றி, பாராளுமன்ற அலுவல்களைக் குழப்பும் விதத்தில், மீண்டும் மீண்டும் நிலையியற் கட்டளைகளை மீறும் விதமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களை சபா மண்டபத்திலிருந்தோ அல்லது பாராளுமன்ற வளாகத்திலிருந்தோ வெளியேற்றும்படியான சபையின் கட்டளைகளையும் இவர் நிறைவேற்ற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,எந்தவொரு விடயம் பற்றியும் முறைப்பாடு செய்யும் போது, அவ்விடயம் தொடர்பான விசாரணை செய்யும் பொறுப்பு படைக்கலச் சேவிதரிடம் வழங்கப்படும். அத்துடன் அவர், இது பற்றிய பாரபட்சமற்ற அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படும்.

பாராளுமன்றத்தின் விசேட உரிமைகளின் காவலர், சபா நாயகராவார், இவரின் கட்டளைகளையேற்று அவற்றைச் செயற்படுத்தும் அதிகாரத்தை, படைக்கலச் சேவிதர் சட்டப்படி பெற்றுள்ளார்.

படைக்கலச் சேவிதர், பாராளுமன்றத்தின் உறுப்பினர் வருகை இடாப்பை பேணும் பொறுப்பையும் சபா மண்டபத்தின் ஆசன ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் பொறுப்பையும் கொண்டிருக்கிறார். பாராளுமன்றக் கட்டிடத்தினுள் ஆயுதம் தரிக்க உரிமை பெற்ற ஒரே அதிகாரி இவரேயாவார்.


செங்கோலின் பாதுகாவலர்

பாராளுமன்ற அதிகாரத்தின் சின்னமாக விளங்கும், வைபவ ரீதியான, அலங்கரிக்கப்பட்ட செங்கோல், படைக்கலச் சேவிதரின் பாதுகாப்பிலேயே இருக்கும். சபா மண்டபத்தில் அதற்குரிய இடத்தில் செங்கோல் வைக்கப்படும் போது, அது சபை அமர்வில் இருப்பதைக் குறிக்கும். கூட்ட சபாநாயகர் சபா மண்டபத்தினுள் பிரவேசிக்கும் போதும், சபா மண்டபத்தை விட்டு வெளியேறும் போதும், படைக்கலச் சேவிதர் செங்கோலை ஏந்தியபடி உடன் வருவார். சட்டத்தின் படி, குறித்த நேரத்தில், செங்கோல் சபா மண்டபத்தினுள் கொண்டுவரப்படவும், கூட்ட அமர்வின் இறுதியில் கொண்டு செல்லப்படவும் வேண்டும். ஆதலால், அங்கீகாரமற்ற முறையில் செங்கோல் அகற்றப்படுவதால், கூட்ட அலுவல்கள் செல்லுபடியற்றவையாகாது.

தவிசில் சபா நாயகர் அமரும் போது, செங்கோலானது சபா பீடத்தில், அதன் பளிங்கு முனை அரசாங்க இருக்கைகளைச் சுட்டும் விதத்தில் வைக்கப்படும். கூட்ட இடை நிறுத்தத்தின் போது செங்கோல் சபா பீடத்தில் இருந்து அகற்றப்படுவதில்லை.

 

Last Updated on 04-09-2018

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom