இளைஞர் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பற்றிய செயலமர்வு வெற்றிகரமாக நிறைவுற்றது |
திகதி : | 2024-05-06 |
பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கான அந்தக் குழுக்கள் பற்றிய செயலமர்வு அண்மையில் (ஏப். 30) வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் இலங்கைப் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வின் பிரதான நோக்கம் இளைஞர் பிரதிநிதிகளுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களைப் பற்றிய பரந்த புரிதலை வழங்குவதும், துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அவர்களின் கருத்துக்களைப் பெறுவதும் ஆகும்.
இந்த செயலமர்வில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரன, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபோட, சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்த செயலமர்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க கலந்துகொண்டார்.
அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மலின் ஹெர்விக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு "தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் ஊடாக இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு" எனும் தொனிப்பொருளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க விசேட உரை நிகழ்த்தினார்.
மேலும், துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் இளைஞர் பிரதிநிதியாகச் சேர்ந்ததன் மூலம் பெற்ற அனுபவம் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டங்களுக்கு இளைஞர் பிரதிநிதிகள் எவ்வாறு வினைத்திறனான பங்களிப்பை மேற்கொள்ள முடியும் என்பது குறித்தும் இளைஞர் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன், இளைஞர் பிரதிநிதிகளுக்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருடன் ஒரு சிறப்பு அமர்வில் இணைந்து, சம்பந்தப்பட்ட குழுக்கள் பற்றிய அறிவையும், குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவான புரிதலைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்தச் செயலமர்வில், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அமைச்சுக்களின் விடயங்களை ஒருங்கிணைக்கும் உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற பணியாளர்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










