இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வடக்கில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்து

திகதி : 2024-04-03

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் அண்மையில் கூடியது. இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மீன்பிடி சமூகத்தினர் மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

வடக்கின் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடியால் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வடபகுதி மீனவ பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் ட்ரோலர் மீன்பிடி முறையால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு இதுவரை கணிப்பிடப்படவில்லை என்பதும் குழுவில் புலப்பட்டது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் கரையிலிருந்து 24 கடல்மைல் தூரத்தில் கடல்வளங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், வடக்கில் அவ்வாறான கணக்கெடுப்பை சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனம் மேற்கொள்ளாமை குறித்து குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.  இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு வடக்கில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி, இதனைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை கூடிய விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு குழு, கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு  அறிவுறுத்தியது.

அத்துடன், மீள் ஏற்றுமதிக்காக வெளிநாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்தும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மீன்கள் பெறுமதி சேர்க்கப்பட்டு மீள் ஏற்றுமதிசெய்யப்பட வேண்டி இருக்கின்றபோதும், அதில் ஒரு பகுதி உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு செய்வதன் ஊடாக நாட்டிற்கு வரி இழப்பு ஏற்படுவதுடன், சர்வதேச சந்தையில் இலங்கையின் மீன்களுக்குக் காணப்படும் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  அத்துடன், மீன்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒரு நிறுவனம், அதிக நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடிய இரால் வகையொன்றை இறக்குமதி செய்வதால் இலங்கையின் ஒட்டுமொத்த இறால் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு மீன்பிடித்துறைக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் மீன் இறக்குமதிக்கு அனுமதி வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கேள்வியெழுப்பிய குழுவின் தலைவர், இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உடனடியாக அழைத்துக் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு  குழு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ மொஹமட் முசம்மில், கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ ஜயரத்ன ஹேரத், கௌரவ ஜகத் பிரியங்கர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom