இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

திகதி : 2024-02-13

  • நுண்நிதியப் பிரச்சினையால் கிராம மக்களில் 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது
  • 38 %, 48% என்ற அதிக வட்டி வீதத்துக்கே நுண்நிதியக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன
  • பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்நிதியக் கடன் பிரச்சினையும் காரணம்
  • முன்மொழியப்பட்டுள்ள உத்தேச சட்டமூலம் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்யவில்லை – பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள்

 

இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் அண்மையில் (பெப். 09) கூடிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நுண்நிதியக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் இந்தக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தன. மேலும், இலங்கை மத்திய வங்கி, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அமைப்புக்கள் இங்கு உரையாற்றுகையில், நுண்நிதி நெருக்கடியினால் 28 இலட்சம் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 இலட்சம் பெண்கள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டினர். 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், இந்தக் கடன்கள் குறைந்த தொகையாக இருந்தாலும், கிராமப்புற மக்களால் அதனை செலுத்த முடியாத நிலையில், 38%, 48% வட்டி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முற்றாக மாறியுள்ளதாகவும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான கிராமப்புறப் பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்வதற்கு நுண்கடன் நெருக்கடி காரணமாக அமைந்திருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ள வங்கி அல்லாத ஆறு பிரதான நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பெருந்தொகையான குழுவினராலேயே நுண்நிதித் துறையில் இந்த நெருக்கடி உருவாகியிருப்பதாகவும், நுண்நிதி கடனான 84,000 மில்லியன் ரூபாவில் 80 % அதாவது 67,000 மில்லியன் ரூபாவை இந்நிறுவனங்கள் வழங்கியிருப்பதாகவும், கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்துவதை இந்நிறுவனங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

அத்துடன், உத்தேச சட்டமூலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் இதனால் தாங்கள் மேலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

உத்தேச சட்டமூலத்தை முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தாமல், மத்திய வங்கியும் நிதியமைச்சும் இணைந்து சட்டமூலத்தை மீளாய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், ஆறு பரிய நிதி நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் அது இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதன் ஊடாகப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இலங்கையிலுள்ள 30 முதல் 40 இலட்சம் வரையிலான நுண்நிதி வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இது விடயம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவிருப்பதாகவும் துறைசார் மேற்கார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சரத் வீரசேகர, கெளரவ நிமல் லான்சா, கெளரவ மெஹமட் முஸ்ஸம்மில், கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ நிமல் பியதிஸ்ஸ மற்றும் கௌரவ ஜயந்த சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom