இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வரி மேன்முறையீடு ஒன்றை விசாரணை செய்வதற்கு 6 வருடங்களுக்கு அதிகமான காலம் செல்கிறது - தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்தது

திகதி : 2023-12-10

உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்திருத்தத்தில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கடந்த டிசம்பர் 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரி மேன்முறையீட்டுக் கோப்புக்கள் 40 மாதங்களுக்கு அதிக காலம் தேங்கியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த வரி மேன்முறையீடு, அதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு 2 வருட காலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. ஆணைக்குழுவின் பின்னர் அந்த வரி மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அல்லது உயர்நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்படுவதுடன் குறித்த வரி மேன்முறையீடு தொடர்பில் தீர்மானம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக் குறைந்தது ஒரு வருட காமலமாவது தேவைப்படுவதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இருந்தபோதும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக விசாரணை செய்து ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் வரி மேன்முறையீடு, குறித்த ஆணைக்குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது 95% உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முடிவுகளுடன் ஒப்பிடப்படுவதாக குழுவில் தெரியவந்ததுடன், இதன் காரணமாக வரி மேன்முறையீட்டை ஆராய்வதற்கு தற்பொழுது எடுத்துக்கொள்ளப்படும் காலக்கெடுவை திருத்தவேண்டியதன் கட்டாயத்தைக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நிலுவை வரியைச் செலுத்துவதை தவிர்த்து, மேன்முறையீட்டுக்கு ஆற்றுப்படுத்துவதற்குக் காணப்படும் நீண்டகால அளவைத் திருத்தி ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்மொழிவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து வரிப்பணத்தை வசூலிப்பதன் மூலம் பெறுமதி சேர் வரி போன்றவற்றால் பாதிக்கப்படும் பொது மக்கள் சற்று ஆறுதல் அடையலாம் எனக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், வரி மேன்முறையீட்டை விரைவில் விசாரணை செய்து முடிப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்பில் விசேட பிரிவொன்றின் அவசியத்தையும் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நினைவுகூர்ந்தனர்.

இதற்கமைய 6 மாதங்களுக்குள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தை திருத்துவதன் ஊடாக இந்நாட்டில் வரி அறவீட்டை வினைத்திறனாக்குவதற்கு சகல தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக அபேசிங்க, கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

4 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom