மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதவளங்கள் வைத்தியசாலைகளுக்குப் பகிரப்படும் விதம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் மதிப்பீட்டு அறிக்கையொன்றை முன்வைக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை |
திகதி : | 2021-11-29 |
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதவளம் என்பன பகிர்ந்தளிக்கப்படும் முறை தொடர்பில் விரைவில் மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அண்மையில் (27) பணிப்புரைவிடுத்தார்.
சில வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் மேலதிகமாக இருக்கும் நிலையில், சில கிராமிய வைத்தியசாலைகளில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதன் ஊடாக சுகாதார நிலைமைகளை முன்னேற்றமான நிலைக்குக் கொண்டுவரக்கூடியதாக இருந்தாலும், மாகாண சபைகளின் கீழ் உள்ள விடயத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அதிகாரப் பரவலாக்கத்துடன் முரண்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வது சிக்கலுக்குரியது என அவர் இங்கு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு முன்வைப்பது பொருத்தமானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் அவ்வப்போது சுகாதாரத்துறையினரால் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பள உயர்வு வழங்கும்போது பொதுவான கொள்கையொன்றை உருவாக்கி அதற்கமைய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி இக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.
கடந்த சில வருடங்களில் நாட்டுக்குள் மேலதிகமான ஔடதங்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் குழு விசேட கவனம் செலுத்தியதுடன், சில வருடங்களில் தேவைக்கு அதிகமான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஔடதங்கள் தொடர்பில் தேசிய தகவல் கட்டமைப்பொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும், நாட்டில் உள்ள சகல வைத்தியசாலைகளையும் இதில் இணைத்துக்கொள்ளவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும், இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டபோதும் அது இன்னும் முறையாகச் செயற்படாமை குறித்தும் குழு விசேட கவனம் செலுத்தியது.
கொவிட் தடுப்பூசி போடப்பட்ட சில நபர்களின் தகவல்கள் அது தொடர்பாக நடைமுறையில் உள்ள தகவல் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்கு உரியது என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குழுவில் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் நிலைமையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
1990 சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 46 இலட்சத்து 33 ஆயிரம் அழைப்புக்கள் கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி சில்வா தெரிவித்தார். குறித்த சேவையை முன்னெடுப்பதற்கு 2022ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1800 மில்லியன் ரூபா என்றும், இது போதுமானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.டி சில்வா சுட்டிக்காட்டியது போன்று ஆகக் குறைந்தது மேலும் 1200 மில்லியன் ரூபாவை இச்சேவைக்கு ஒதுக்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு, குழுவில் தெரிவித்தது.
719 ஆயுர்வேத பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாகவும் கூட்டத்தில் தெரியவந்தது. உள்நாட்டில் ஆயுர்வேத மருந்தகங்களை திறந்து அவர்களுக்கு நியமனம் வழங்கும் திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கௌரவ அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்













