இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கட்டுமானங்கள் தொடர்பில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்துவது பற்றி அவதானம்

திகதி : 2021-11-26

கட்டுமானப் பணிகளுக்கு வெவ்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது அவை வெவ்வேறு வடிவங்களில் காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் ஒரே வடிவத்தில் அனுமதிப்பத்திரத்தை உருவாக்குவது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் உள்ள இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்றுமுன்தினம் (24) இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தலைமையில் நடைபெற்றது. இதிலேயே மேற்கண்ட விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்குச் செல்லும்போது ஒவ்வொரு மன்றத்திலும் கட்டுமானங்கள் தொடர்பில் வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக சேவையைப் பெற்றுக்கொள்ளச் செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார். எனவே நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரே மாதிரியான அனுமதிப் பத்திரத்தை வழங்குவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய வழிமுறையொன்றை விரைவில் வகுக்குமாறு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், திட்டங்களை அனுமதிக்கும்போது அதிகாரிகளினால் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் நிதி மோசடிகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. விசேடமாக இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடுகளைக் கையளிப்பதற்கு தனியான இடமொன்றை அடையாளம் காண்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஒரு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு பல நிறுவனங்களிடம் அனுமதி பெறுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு கௌரவ இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பல பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமானங்கள் மற்றும் புதிய கட்டுமானத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளும் இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, குணபால ரத்னசேகர, வசந்த யாப்பா பண்டார, சாமர சம்பத் தசநாயக்க, அமரகீர்த்தி அத்துகோரள, மஞ்சுளா திஸாநாயக்க, சுதத் மஞ்சுள, அசங்க நவரத்ன, வீரசுமன வீரசிங்ஹ, குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom