விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என மூன்று அரசியல் கட்சிகள் பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை |
திகதி : | 2021-10-08 |
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று (07) பரிந்துரைத்தது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக பொது மக்களின் நியாயமான பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும், இந்த முறையின் கீழ் சகல வாக்குகளுக்கும் மதிப்பை வழங்க முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.
பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
புதிய திருத்தத்தின் ஊடாக ஸ்திரமான அரசாங்கமொன்று உருவாக்கப்படுவதும் மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது.
நாட்டில் உள்ள சகல பூகோள எல்லைகளையும் அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவம் புதிய திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும். விருப்பு வாக்கு முறையின் ஊடாக தமக்குத் தேவையான மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்களால் தெரிவுசெய்ய முடியும். வாக்குச் சீட்டுக்கள் மக்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியது. தேர்தல் முறையின் ஸ்திரத்தன்மை அவசியமானது என்றும், இது வாக்காளர்களின் கோணத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றியமைக்காது அதில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்குப் புதிய திருத்தங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு எனப் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டது.
விசேட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என அக்கட்சி தெரிவித்தது. விகிசாதாரப் பிரதிநிதித்துவ முறை நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்றும், இதன் ஊடாக மக்களின் வாக்குரிமை பலப்படுத்தப்படும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்குமான மூன்று தேர்தல்களுக்கும் விகிசாதாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் பரிந்துரைகளை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குறிப்பிடுகையில், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனத் தெரிவித்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார். பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். தேசியப்பட்டிலியலில் 50சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார்.
தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் சகல சந்தர்ப்பத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கலாசாரத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவடைந்துள்ளது என்றும் அவர் குழுவில் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










