இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் எட்டாவது மாநாட்டை இலங்கை நடத்தவுள்ளது

திகதி : 2017-09-25

banner

சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் (ASSP) எட்டாவது மாநாடு 2017 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

 

தெற்காசிய மக்களுக்கிடையில் நட்புறவு மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்கும், சார்க் நாடுகளின் பாராளுமன்றங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் தகவல் ஒருங்கிணைப்பு மற்றும் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும், பிராந்தியத்தின் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் வழக்கங்கள் பற்றிய ஆலோசனைகளையும் தகவல்களையும் பரிமாற்றம் செய்வதற்கானதொரு களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் 1992 இல் ஆரம்பிக்கப்பட்டது.

 

சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் (ASSP) முதலாவது மாநாடு 1995 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. அதனையடுத்து, இரண்டாவது மாநாடு 1997 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும், மூன்றாவது மாநாடு 1999 ஆம் ஆண்டு பங்களாதேஷிலும், நான்காவது மாநாடு 2006 ஆம் ஆண்டு இலங்கையிலும் ஐந்தாவது மாநாடு 2011 ஆம் ஆண்டு இந்தியாவிலும், இறுதி மாநாடு 2013 ஆம் ஆண்டு மாலைதீவிலும் நடைபெற்றது.

 

இலங்கைப் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 08 ஆவது மாநாடு, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான சங்கத்தின் (SAARC) அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும்.

 

2017 ஒக்டோபர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு இலங்கை சனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க திறப்பு விழாவின் போது ஆரம்ப உரை நிகழ்த்துவார். பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய வரவேற்புரை நிகழ்த்தி அங்குரார்ப்பண வைபவத்தைச் சிறப்பிப்பார்.

 

‘சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம்’: நிலைபேறான அபிவிருத்தியின் 2030 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலை எய்துவதற்கு தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பணியாற்றுவதற்கானதொரு களம் என்பது பிரதான கருப்பொருளாதலால், இவ்வருட மாநாட்டில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. “பாராளுமன்ற இராஜதந்திரம் மற்றும் டிஜிற்றல் மயமாக்கப்பட்ட யுகத்தில் திறந்த பாராளுமன்றத்தை மேம்படுத்தல்” மற்றும் “தெற்காசிய பிராந்தியத்தில் கலாசார மற்றும் தொல்பொருளியல் மரபுரிமையைப் பேணுவதில் சார்க் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம்” ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் பொதுச்சபை எதிர்பார்க்கின்றது.

 

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டம் “பெண்கள் வறுமையிலிருந்து மீண்டெழுவதற்கும் தமது சமுதாயங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளித்தல்” என்னும் தலைப்பில் கவனம் செலுத்தவுள்ளது.

 

இவ்வருட மாநாட்டில் “பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக, இளைஞர்களிடையே வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்கொள்ளலும் ஆட்கடத்தல், நவீன அடிமைத்துவம், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை முறியடிப்பதற்கு இளைஞரை வலுவூட்டுதலும்” பற்றிக் கலந்துரையாடவுள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டம் முதல் தடவையாக நடைபெறவுள்ளது.

 

இந்த மாநாட்டைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களுக்காக இலங்கைப் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டி நகரத்திற்கான (தலதா மாளிகை மற்றும் பின்னவலை யானைகள் சரணாலயம்) சுற்றுலாவொன்று ஒக்டோபர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்படும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom